முன்னாள் தமிழக வீரரும், அஸ்வின் பயிற்சியாளரான சுனில் இந்திய அணி மேலாளராக நியமனம்!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய மேலாளராக முன்னாள் தமிழக வீரர் சுனில் சுப்ரமணியன் வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
முன்னாள் தமிழக வீரரும், அஸ்வின் பயிற்சியாளரான சுனில் இந்திய அணி மேலாளராக நியமனம்!
Published on
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணிக்கான மேலாளர் காலிப் பணியிடம் தொடர்பாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து அந்தப் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வழங்க ஜூலை 21-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அப்பதவிக்காக 35 பேர் வரை விண்ணப்பித்து இருந்தனர். இதிலிருந்து சுமார் 12 பேர் நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அந்த 12 பேருக்கும் பிசிசிஐ தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா தலைமையில் செவ்வாய்கிழமை நேர்காணல் நடத்தப்பட்டது. 

இதிலிருந்து 5 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் சௌத்ரி மற்றும் பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய்க்கும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய மேலாளராக முன்னாள் தமிழக வீரர் சுனில் சுப்ரமணியன், வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். இவர் அடுத்த ஒரு வருடத்துக்கு இப்பதவியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் 2-ஆவது போட்டிக்குள் சுனில் இந்திய அணியுடன் இணையவுள்ளார்.

இடதுகை சுழற்பந்துவீச்சாளரான சுனில் சுப்ரமணியன், இதுவரை 74 முதல்தர போட்டிகளில் தமிழக அணிக்காக விளையாடி 285 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், தமிழக ரஞ்சி அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், என்சிஏ எனப்படும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளராகவும் செயல்படுகிறார். சுமார் 16 ஆண்டுகளாக பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் மேலான்மைப் பிரிவுகளில் அதீத அனுபவம் பெற்றவர் ஆவார்.

தற்போது உலகளவில் சிறந்த சுழற்பந்துவீச்சாளராகவும், தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவருமான தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வினுக்கு சிறுவயதில் பயிற்சியாளராக இருந்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com