மழையால் தப்பித்த ஆஸ்திரேலிய அணி! நியூஸிலாந்து பரிதாபம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 45 ஓவர்களில் 291 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
மழையால் தப்பித்த ஆஸ்திரேலிய அணி! நியூஸிலாந்து பரிதாபம்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 45 ஓவர்களில் 291 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன்பிறகு அற்புதமாகப் பந்துவீசிய நியூஸிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை மழை தடுத்துவிட்டது.

அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 97 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் குவித்தார்.

எட்பாஸ்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மார்ட்டின் கப்டிலும், லுக் ரோஞ்சியும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.4 ஓவர்களில் 40 ரன்கள் சேர்த்தது. கப்டில் 22 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் சேர்த்து வெளியேற, கேன் வில்லியம்சன் களம்புகுந்தார். வில்லியம்சன் நிதானமாக ரன் சேர்க்க, ரோஞ்சி அதிரடியில் இறங்கினார். அந்த அணி 9.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதன்பிறகு ஆட்டம் 46 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

மழைக்குப் பிறகு ஆட்டம் தொடங்க, கம்மின்ஸ் பந்துவீச்சில் தொடர்ச்சியாக ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டிய ரோஞ்சி, 33 பந்துகளில் அரை சதம் கண்டார். தொடர்ந்து வேகம் காட்டிய அவர், கம்மின்ஸ் வீசிய 15-ஆவது ஓவரில் இரு பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசினார்.

அந்த அணி 15.4 ஓவர்களில் 117 ரன்களை எட்டியபோது, ஹேஸ்டிங்ஸ் பந்துவீச்சில் மேக்ஸ்வெலிடம் கேட்ச் ஆனார் ரோஞ்சி. அவர் 43 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து வில்லியம்சனுடன் இணைந்தார் ராஸ் டெய்லர். இந்த ஜோடி நிதானம் காட்ட, நியூஸிலாந்தின் ரன் வேகம் குறைந்தது.

இதன்பிறகு வில்லியம்சன் 62 பந்துகளில் அரை சதமடித்தார். மறுமுனையில் வேகமாக விளையாட ஆரம்பித்த டெய்லர், ஹேஸ்டிங்ஸ் பந்துவீச்சில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசிய கையோடு ஆட்டமிழந்தார். அவர் 58 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து நீல் புரூம் களமிறங்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிய வில்லியம்சன் 96 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 9-ஆவது சதமாகும். எனினும் அடுத்த பந்திலேயே அவர் ரன் அவுட்டானார். அவர் 97 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். எஞ்சிய வீரர்கள் விரைவாக வெளியேற, 45 ஓவர்களில் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூஸிலாந்து.

ஆஸ்திரேலியத் தரப்பில் ஜோஷ் ஹேஸில்வுட் 9 ஓவர்களில் 52 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

மீண்டும் மழை: நியூஸிலாந்தின் இன்னிங்ஸ் முடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் மழை பெய்ததால் ஆஸ்திரேலியா பேட் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

பிறகு ஆட்டம் தொடர்ந்தபோது நியூஸிலாந்து வீரர்கள் அற்புதமாகப் பந்துவீசினார்கள். 9 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து ஆஸி. அணி தடுமாறியிருந்த நேரத்தில் மழை பெய்து ஆஸ்திரேலியாவைக் காப்பாற்றியது.

தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இந்தப் போட்டியில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com