வெற்றிக்கு மிக அருகில் சென்று ஏமாற்றம் அடைந்த ஆஸ்திரேலியா!

வெற்றிக்கு மிக அருகில் சென்ற ஆஸ்திரேலிய அணி, கடைசியில் ஆட்டம் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி மட்டுமே பெற்றுள்ளது.
வெற்றிக்கு மிக அருகில் சென்று ஏமாற்றம் அடைந்த ஆஸ்திரேலியா!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. வெற்றிக்கு மிக அருகில் சென்ற ஆஸ்திரேலிய அணி, கடைசியில் ஆட்டம் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி மட்டுமே பெற்றுள்ளது.

லண்டனில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

ஆனால் அந்த அணி 44.3 ஓவர்களில் 182 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் தொடக்க வீரர் தமிம் இக்பால் 95 ரன்கள் குவித்தபோதும், எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியது ஏமாற்றமாக அமைந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களான தமிம் இக்பால்-செளம்ய சர்க்கார் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவர்களில் 22 ரன்கள் சேர்த்தது.

செளம்ய சர்க்கார் 3 ரன்களில் நடையைக் கட்ட, பின்னர் வந்த இம்ருள் கயெஸ் 3, கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 16.2 ஓவர்களில் 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேசம்.

இதையடுத்து தமிம் இக்பாலுடன் இணைந்தார் ஷகிப் அல்ஹசன். இந்த ஜோடி நிதானமாக ஆட, வங்கதேசம் மோசமான நிலையில் இருந்து மெதுவாக மீண்டது. இதனிடையே தமிம் இக்பால் 69 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.
வங்கதேசம் 29.5 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்திருந்தபோது, அல்ஹசனின் விக்கெட்டை இழந்தது. அவர் 48 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது.

இதன்பிறகு ஒருபுறம் தமிம் இக்பால் போராட, மறுமுனையில் சபீர் ரஹ்மான், மகமதுல்லா ஆகியோர் தலா 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து மெஹதி ஹசன் மிராஸ் களமிறங்க, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தமிம் இக்பால் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 114 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் மேற்கண்ட ரன்களை எடுத்தார்.

பின்னர் வந்த மோர்ட்டஸா, ரூபெல் ஹுசைன் ஆகியோர் ரன் ஏதுமின்றியும், மிராஸ் 14 ரன்களிலும் ஸ்டார்க் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தனர். இதனால் 44.3 ஓவர்களில் 182 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்.

ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 8.3 ஓவர்களில் 29 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின்னர் ஆஸ்திரேலிய அணி, 16 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. வார்னர் 40, ஸ்மித் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

தொடர்ந்து மழை பெய்ததாலும் கட்டாயத் தேவையான 20 ஓவர்களுக்கு ஆட்டம் நடைபெறாததாலும் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி ஆட்டம் கைவிடப்பட்டது. கடைசியில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com