தோனி, யுவராஜ் குறித்து முடிவெடுக்க வேண்டிய தருணமிது

இந்திய அணியில் அவர்கள் இருவருக்கும் வாய்ப்பு உள்ளதா? அல்லது அவர்களில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு உள்ளதா?
தோனி, யுவராஜ் குறித்து முடிவெடுக்க வேண்டிய தருணமிது

2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை கருத்தில் கொண்டு, தோனி, யுவராஜ் சிங் போன்றோருக்கு அணியில் வாய்ப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டிய தருணமிது என்று இந்திய ஏ அணி மற்றும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் சுமார் 2 ஆண்டுகளே உள்ளன. இந்நிலையில், இந்திய அணிக்கான திட்டம் என்ன?, அடுத்த 2 ஆண்டுகளில் தோனி, யுவராஜ் போன்றவர்களுக்கான வாய்ப்புகள் என்ன?, உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அவர்கள் இருவருக்கும் வாய்ப்பு உள்ளதா? அல்லது அவர்களில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து தேர்வாளர்களும், அணி நிர்வாகமும் முடிவெடுக்க வேண்டிய நேரமிது.

அது தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ள ஓராண்டோ, 6 மாதமோ தேவையில்லை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முழுமையான அணியை தேர்வு செய்துள்ளனர்.

அதேவேளையில், பிளேயிங் லெவனில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று நம்புகிறேன். அப்போது தான் ஒரு சிலரை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை வராது.

அதேபோல, தட்டையான ஆடுகளங்களில் விக்கெட் வீழ்த்துவது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு (அஸ்வின், ஜடேஜா) கடினமானதாக உள்ளது. அதுபோன்ற ஆடுகளத்தில் மிடில் ஆர்டரில் விக்கெட்டுகளை வீழ்த்த குல்தீப் யாதவ் போன்றவர்கள் சரியான தேர்வாக இருப்பார்கள். அவருக்கு களத்தில் அதிக ஓவர்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று ராகுல் திராவிட் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com