இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் முதல் ஒரு நாள் ஆட்டம்

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் முதல் ஒரு நாள் ஆட்டம்

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவின் குற்றச்சாட்டுகளால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் இந்திய கேப்டன் கோலி, இந்தத் தொடரை வென்று தன் மீதான விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியோடு ஒப்பிடுகையில் இந்திய அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், ஷிகர் தவனுடன் அஜிங்க்ய ரஹானே தொடக்க வீரராக களமிறங்குகிறார்.
மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, யுவராஜ் சிங், தோனி, கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா கூட்டணி பலம் சேர்க்கிறது. கேதார் ஜாதவ், பாண்டியா ஆகியோருக்கு இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாகும்.
வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா கூட்டணியையும் நம்பியுள்ளது இந்தியா.
மேற்கிந்தியத் தீவுகள் அணி கத்துக்குட்டியாகவே உள்ளது. அந்த அணி, சமீபத்தில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானிடம் தோற்றது. அந்த அணியில் பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் யாரும் இல்லை. எனவே அந்த அணி தனது சொந்த மண்ணில் பலம் வாய்ந்த இந்திய அணியை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தற்போது இடம்பெற்றுள்ள 13 வீரர்களும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 213 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளனர். ஆனால் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள யுவராஜ் சிங் மட்டுமே 301 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
இந்தத் தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்றால், தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறும். மாறாக தோற்கும்பட்சத்தில் தரவரிசையில் 3-ஆவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்துக்கு தள்ளப்படும்.
இதுவரை... இவ்விரு அணிகளும் இதுவரை 116 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் மேற்கிந்தியத் தீவுகள் 60 வெற்றிகளையும், இந்தியா 53 வெற்றிகளையும் பெற்றுள்ளன. ஓர் ஆட்டம் டையில் முடிந்துள்ளது. இரு ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை.

இந்தியா (உத்தேச லெவன்) ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி (கேப்டன்), யுவராஜ் சிங், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ்,
ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்.

மே. இ.தீவுகள் (உத்தேச லெவன்) எவின் லீவிஸ், கிரண் பாவெல், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஜொனாதன் கார்ட்டர், ஜேசன் முகமது, ரோஸ்டான் சேஸ், ரோவ்மன் பாவெல், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஆஷ்லே நர்ஸ்,
அல்ஜாரி ஜோசப், மிக்கேல் கம்மின்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com