

இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் மெல்ல மெல்ல மேலேறி வருகிறது டெல்லி. மற்ற அணிகள் இதையும் ஒரு பொருட்டாக எண்ணும் அளவுக்கு அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றுவருகிறது. மிகவும் விமரிசிக்கப்பட்ட ராகுல் டிராவிட்டின் திட்டங்கள் கடைசிக்கட்டத்தில் முடிவுகளைத் தந்துகொண்டிருக்கின்றன.
இப்போதுள்ள கேள்வி. எல்லாம் சரி, டெல்லி அணி பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறுமா?
முடியும். மீதமுள்ள 4 ஆட்டங்களையும் வென்றால் நிச்சயம் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியும். இப்போது 10 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளோடு 6-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 ஆட்டங்களையும் வெற்றி பெறுகிற பட்சத்தில் 16 புள்ளிகளுடன் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெறும்.
நிச்சயம் வேலைக்கு ஆகாத அணி என்று அனைவரும் டெல்லி அணியை உதறிய நேரத்தில்தான் டெல்லியின் இளம் வீரர்கள் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார்கள்.
தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்திருந்த டெல்லி அணி கடும் விமரிசனத்துக்கு ஆளானது. அதன் அலோசகர் டிராவிடைப் பலரும் விமரிசித்தார்கள். இளம் வீரர்களை வளர்ப்பதற்காக அணியைக் காவு வாங்குகிறார் என்றெல்லாம் பழியைச் சுமக்கவேண்டிய நிலைமைக்கு ஆளானார். ஆனால் அதே அணியைக் கொண்டு கடந்த இரண்டு ஆட்டத்திலும் தன் திட்டத்தை வெற்றி பெற வைத்துள்ளார் டிராவிட். அவர் ஊக்குவித்த எந்த வீரரும் சாதாரணமானவர்கள் அல்லர் என்பதைக் கடந்த இரண்டு ஆட்டங்களும் நிரூபித்துவிட்டன.
டிராவிட் நம்பிக்கை வைத்த வீரர்களின் வயதைப் பார்ப்போம். சஞ்சு சாம்சன் - 22 வயது, கருண் நாயர் - 25 வயது, ரிஷப் பந்த் - ஸ்ரேயாஸ் ஐயர் - 22 வயது. இவர்கள்தான் டெல்லி அணியின் முதல் நான்கு வீரர்களாகக் களமிறங்கும் வீரர்கள். ஒட்டுமொத்தமாக 10 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே விளையாடிய இளம் வீரர்கள். இதுதான் டிராவிட் மீதான மரியாதையை அதிகப்படுத்துகிறது.
முடிந்தது என்று அனைவரும் டெல்லியைக் கைகழுவிய நேரத்தில்தான் பலம் பொருந்திய ஹைதராபாத்தை வீழ்த்தியது. அதாவது இதற்கு முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப், டெல்லி அணியை 67 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இது. அந்த ஆட்டத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப். அப்போது மிகவும் சோகமாகப் பேட்டியளித்தார் டிராவிட். அப்போது விட்டுக்கொடுக்கவில்லை. அதுதான் இளம் வீரர்களை மிகவும் உறுத்தியிருக்கும். அடுத்தப் போட்டியில் அனைவருமே வெறிகொண்டு ஆடினார்கள் என்று சொல்லலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. இரு அணிகளுக்கும் இடையே தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து வென்றது.
யுவராஜ் சிங் அன்றைய தினம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 34 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் அரைசதம் கடந்தார். யுவராஜ் சிங் 41 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இருப்பினும் டெல்லி அணி வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வெற்றியைப் பறித்துக்கொண்டார்கள். 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து வென்றது டெல்லி. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 24 ரன்கள், உடன் வந்த கருண் நாயர் 39 ரன்கள், ரிஷப் பந்த் 20 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 34, அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 25 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 33 ரன்கள் என இளம் வீரர்கள் அனைவரும் அபாரமான பங்களிப்பை அளித்தார்கள். கோரே ஆண்டர்சன் 24 பந்துகளுக்கு 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 41 ரன்களுடனும், கிறிஸ் மோரிஸ் 7 பந்துகளுக்கு தலா ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் என 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார்கள்.
ஹைதராபாத்தை வென்ற பிறகு ஏற்கெனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட குஜராத் அணியை வெல்வதில் பெரிய சிரமம் ஏற்படவில்லை. ஆனால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது குஜராத். இதனால் டெல்லி வெற்றி பெற சிரமப்படவேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே இளம் வீரர்கள் நேற்றும் அட்டகாசம் செய்தார்கள். பந்த், சாம்சன் ஆகிய இருவரும் சிக்ஸர் மழை பொழிய, 10 ஓவர்களில் 113 ரன்களை எட்டியது டெல்லி. சாம்சன் 24 பந்துகளில் அரை சதம் கண்டார். சாம்சன் 31 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். 27 பந்துகளில் அரை சதத்தை எட்டிய ரிஷப் பந்த், 43 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ரிஷப் பந்த் 43 பந்துகளில் 9 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடித்து அனைவர் கவனத்தையும் ஈர்த்தார்.
டெல்லி அணியின் வெற்றி பஞ்சாப், ஹைதராபாத் அணிகளுக்குக் கடும் நெருக்கடியை அளித்துள்ளது. புணே அணிக்கு மீதமுள்ள 3 ஆட்டங்களில் ஒன்றில் ஜெயித்தால் போதும். ஆனால் ஹைதராபாத் அணி மீதமுள்ள 3 ஆட்டங்களில் இரண்டை வென்றாகவேண்டும். அதேபோல பஞ்சாப் அணியும் மீதமுள்ள 5 ஆட்டங்களில் நான்கை வென்றால்தான் பிளேஆஃப்.
பெங்களூர், குஜராத் போல பிளேஆஃப் போட்டியிலிருந்து டெல்லி வெளியேறவில்லை. சிறிய வாய்ப்புதான் என்கிற நிலையிலும் கடுமையாகப் போராடுகிறது. இளம்குருத்துகள் ஆடுகிற ஆட்டத்தைப் பார்க்கும்போது மீதமுள்ள 4 ஆட்டங்களையும் ஏன் வெல்லமுடியாது என்கிற நம்பிக்கை வருகிறது. டிராவிட் வைத்த அதே நம்பிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.