
தில்லி மற்றும் உத்தரப்பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இது தில்லி மாநகரத்தின் பாலம் என்ற இடத்தில் அமைந்துள்ள விமானப்படைக்குச் சொந்தமான ஆடுகளத்தில் நடக்கிறது.
இந்த ஆட்டத்தின் போது வெள்ளிக்கிழமை மாலை 4:40 மணியளவில் திடீரென கார் ஒன்று புகுந்தது. அதுமட்டுமல்லாமல் ஆடுகளத்தின் மையப்பகுதியில் 2 முறை வட்டமிட்டது. இதனால் மைதானத்தில் இருந்த வீரர்கள், நடுவர்கள் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், அந்த காரில் இருந்தவர் தன்னை கிரிஷ் ஷர்மா என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். உடனடியாக அங்கு விரைந்த மைதானக் காவலர்கள் அந்த மர்ம நபர் தப்பிச் செல்வதை தடுக்க மைதானத்தின் கதவுகளை மூடினர்.
பின்னர் அங்கிருந்த விமானப்படை காவலர்கள் அவரைக் கைது செய்து தில்லி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர் ஏன் அங்கு அதுபோன்று வந்தார் என்பது
தொடர்பாக தில்லி காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.
மைதானத்தின் கார்கள் நிறுத்தம் பகுதியில் உள்ள கதவுகள் திறந்திருந்த காரணத்தால் அவர் நேரடியாக மைதானத்தில் நுழைய வசதியாக இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் நடந்த போது அங்கு பாதுகாவலர்கள் யாரும் இல்லை.
சர்வதேச வீரர்களான இஷாந்த் ஷர்மா, கௌதம் கம்பீர், ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் விளையாடும் இப்போட்டியில் வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.