ஆட்ட நாயகன் - ஸ்மித்: முதல் டெஸ்ட் போட்டியை எளிதாக வென்ற ஆஸ்திரேலியா!

அற்புதமான சதமெடுத்து டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவின் பக்கம் திருப்பிய ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது...
ஆட்ட நாயகன் - ஸ்மித்: முதல் டெஸ்ட் போட்டியை எளிதாக வென்ற ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 116.4 ஓவர்களில் 302 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜேம்ஸ் வின்ஸ் 83 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா 130.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் பிராட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 26
ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து 71.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 51 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், ஹேஸில்வுட், நாதன் லயன் தலா 3 விக்கெட்டும், பட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 170 ரன்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 34 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்தது. பேன்கிராஃப்ட் 51, வார்னர் 60 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

ஆஸ்திரேலியா. அணியின் வசம் 10 விக்கெட்டுகளும் உள்ள நிலையில், வெற்றிக்கு 56 ரன்களே தேவைப்பட்டது. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அந்த இலக்கை எளிதாக எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 173 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியை வென்றது. பேன்கிராஃப்ட் 82, வார்னர் 87 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

அற்புதமான சதமெடுத்து டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவின் பக்கம் திருப்பிய ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 2 அன்று தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com