3-ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி: தொடரை வென்றது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. 
3-ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி: தொடரை வென்றது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. 
இதன்மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது. 
இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா (71), அஜிங்க்ய ரஹானே (70), ஹார்திக் பாண்டியா (78) ஆகியோரின் அபார பேட்டிங்கால் 294 என்ற வலுவான இலக்கை எளிதாக எட்டியது இந்தியா. 
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆஸ்திரேலிய அணியில் ஹில்டன் கார்ட்ரைட், மேத்யூ வேட் ஆகியோருக்குப் பதிலாக ஆரோன் ஃபிஞ்ச், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்ய, டேவிட் வார்னரும், ஆரோன் ஃபிஞ்சும் அந்த அணியின் இன்னிங்ûஸ தொடங்கினர். ஜஸ்பிரித் பூம்ரா வீசிய 3-ஆவது ஓவரில் ஆரோன் ஃபிஞ்ச் இரு பவுண்டரிகளை விரட்ட, மறுமுனையில் எச்சரிக்கையோடு விளையாடிய வார்னரும் சரியான பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட தவறவில்லை. இதனால் முதல் 10 ஓவர்களில் 49 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா.
ஆரோன் ஃபிஞ்ச் சதம்: சாஹல் வீசிய 13-ஆவது ஓவரில் ஆட்டத்தின் முதல் சிக்ஸரை விளாசினார் வார்னர். இதன்பிறகு வேகமாக ரன் சேர்க்க முயன்ற வார்னர், பாண்டியா வீசிய அடுத்த ஓவரில் பவுண்டரியை விளாசிய கையோடு ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 44 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார். வார்னர்-ஃபிஞ்ச் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.3 ஓவர்களில் 70 ரன்கள் சேர்த்தது. 
இதையடுத்து களம்புகுந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஆரோன் ஃபிஞ்ச், சாஹல் வீசிய 21-ஆவது ஓவரில் இரு பவுண்டரிகளை விரட்டி 61 பந்துகளில் அரை சதம் கண்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஆரோன் ஃபிஞ்ச், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல் என அனைவருடைய பந்துவீச்சையும் பதம்பார்த்தார். குல்தீப் யாதவ் வீசிய 34-ஆவது ஓவரின் 2-ஆவது பந்தில் பவுண்டரியை விளாசி, 110 பந்துகளில் சதம் கண்டார் ஆரோன் ஃபிஞ்ச். ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 8-ஆவது சதம் இது. 
ஆரோன் ஃபிஞ்சின் அபார ஆட்டத்தால், 35-ஆவது ஓவரில் 200 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. ஆரோன் ஃபிஞ்ச் வேகமாக ரன் சேர்க்க, மறுமுனையில் பந்துகளை வீணடிக்காமல் விளையாடிய கேப்டன் ஸ்மித் 55 பந்துகளில் அரை சதம் கண்டார். ஆஸ்திரேலியா 37.5 ஓவர்களில் 224 ரன்கள் எடுத்திருந்தபோது ஆரோன் ஃபிஞ்சின் விக்கெட்டை இழந்தது. குல்தீப் யாதவ் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முற்பட்ட ஆரோன் ஃபிஞ்ச், டீப் மிட் விக்கெட் திசையில் நின்ற கேதார் ஜாதவிடம் கேட்ச் ஆனார். இந்தத் தொடரில் முதல்முறையாக களமிறங்கிய ஆரோன் ஃபிஞ்ச் 125 பந்துகளில் 5 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தது. 
இதையடுத்து மேக்ஸ்வெல் களமிறங்க, 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. இதனால் அந்த அணி 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குல்தீப் யாதவ் வீசிய 42-ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்டீவன் ஸ்மித் (71 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 63) ஆட்டமிழக்க, சாஹல் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல் (5) ஸ்டெம்பிங் ஆனார். இந்தத் தொடரில் மூன்றாவது முறையாக சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார் மேக்ஸ்வெல். 
ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, ஆஸ்திரேலியாவின் ரன் வேகம் குறைந்தது. இதன்பிறகு இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீச, டிராவிஸ் ஹெட் 4 ரன்களிலும், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 3 ரன்களிலும் நடையைக் கட்டினர். கடைசிக் கட்டத்தில் ஸ்டோனிஸ் 28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் சேர்க்க, ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் குவித்தது. 
இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பூம்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ரோஹித்-ரஹானே அபாரம்: பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, கம்மின்ஸ் வீசிய 5-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரையும், கோல்ட்டர் நீல் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியையும் விளாச, இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 
ரோஹித் சர்மா தொடர்ந்து சிக்ஸரையும், பவுண்டரியையும் பறக்கவிட, ஸ்டோனிஸ் வீசிய 10-ஆவது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார் ரஹானே. இதனால் முதல் 10 ஓவர்களில் 68 ரன்கள் சேர்த்தது இந்தியா. 
இதன்பிறகு ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி, 42 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ரோஹித் சர்மா. இதனால் 15 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இந்தியா. மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரஹானே, கம்மின்ஸ் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி, 50 பந்துகளில் அரை சதம் கண்டார். இந்தியா 21.4 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்திருந்தபோது ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்தது. அவர் 62 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் குவித்தார்.
பாண்டியா அதிரடி: இதையடுத்து கேப்டன் கோலி களமிறங்க, ரஹானே 76 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் சேர்த்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து சோதனை அடிப்படையில் 4-ஆவது இடத்தில் ஹார்திக் பாண்டியா களமிறக்கப்பட்டார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பாண்டியா, வந்த வேகத்தில் ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசினார். அவர் தொடர்ந்து சிறப்பாக ஆட, கேப்டன் கோலி 35 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களம்புகுந்த கேதார் ஜாதவ் 2 ரன்களில் நடையைக் கட்ட, அப்போது இந்தியா 35.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து மணீஷ் பாண்டே களமிறங்க, மறுமுனையில் நின்ற பாண்டியா சிக்ஸரையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். இதனால் அவர் 45 பந்துகளில் அரை சதம் கண்டார். ஸ்டோனிஸ் வீசிய 45-ஆவது ஓவரில் மணீஷ் பாண்டே, பாண்டியா ஆகியோர் தலா இரு பவுண்டரிகளை விரட்ட, இந்தியாவின் வெற்றி எளிதானது. 
இந்தியா 45.5 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்திருந்தபோது பாண்டியா ஆட்டமிழந்தார். அவர் 72 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்தார். இதையடுத்து தோனி களமிறங்க, இந்தியா 47.5 ஓவர்களில் 294 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. பாண்டே 32 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 36, தோனி 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் பட் கம்மின்ஸ் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹார்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகள் இடையிலான 4-ஆவது ஆட்டம் வரும் வியாழக்கிழமை பெங்களூரில் நடைபெறுகிறது.

தரவரிசையில் இந்தியா முதலிடம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 போட்டிகளிலும் வென்று தொடரை விரைவாக கைப்பற்றியதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளது. டெஸ்ட் தரவரிசையிலும் இந்திய அணி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

69
ஆஸ்திரேலிய அணி, கடைசி 69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. 

3
ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் ஒரு நாள் போட்டியில் 8-ஆவது சதத்தை விளாசினார். அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வெளியே அவர் அடித்த 3-ஆவது சதம் இது. ஆசிய மண்ணில் அவர் சதமடிப்பது இதுவே முதல்முறையாகும்.

5
இந்தூரில் இதுவரை 4 ஒரு நாள் போட்டி, ஒரு டெஸ்டில் விளையாடியுள்ள இந்திய அணி, அவையனைத்திலும் வெற்றி கண்டுள்ளது.

6
2016 ஜூனுக்குப் பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக 6 ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது. 

ஸ்கோர் போர்டு

ஆஸ்திரேலியா 

டேவிட் வார்னர் (பி) பாண்டியா 42 44
ஆரோன் ஃபிஞ்ச் (சி) ஜாதவ் (பி) குல்தீப் 124 125
ஸ்டீவன் ஸ்மித் (சி) பூம்ரா (பி) குல்தீப் 63 71
மேக்ஸ்வெல் (ஸ்டெம்பிங்) தோனி (பி) சாஹல் 5 13
டிராவிஸ் ஹெட் (பி) பூம்ரா 4 6
மார்கஸ் ஸ்டோனிஸ் நாட் அவுட் 27 28
ஹேண்ட்ஸ்காம்ப் (சி) பாண்டே (பி) பூம்ரா 3 7
ஆஷ்டன் அகர் நாட் அவுட் 9 6
உதிரிகள் 16 
மொத்தம் (50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு) 293


விக்கெட் வீழ்ச்சி: 1-70 (வார்னர்), 2-224 (ஃபிஞ்ச்), 3-243 (ஸ்மித்), 4-243 (மேக்ஸ்வùல்), 5-260 (டிராவிஸ்), 6-275 (ஹேண்ட்ஸ்காம்ப்). 

பந்துவீச்சு: புவனேஸ்வர் குமார் 10-0-52-0, ஜஸ்பிரித் பூம்ரா 10-0-52-2, யுவேந்திர சாஹல் 10-0-54-1, ஹார்திக் பாண்டியா 10-0-58-1, குல்தீப் யாதவ் 10-0-75-2.

இந்தியா

அஜிங்க்ய ரஹானே எல்பிடபிள்யூ (பி) கம்மின்ஸ் 70 76
ரோஹித் சர்மா (சி) சப்ஸ்டிடியூட் (கார்ட்ரைட்) (பி) கோல்ட்டர் நீல் 71 62
விராட் கோலி (சி) ஃபிஞ்ச் (பி) அகர் 28 35
ஹார்திக் பாண்டியா (சி) ரிச்சர்ட்சன் (பி) கம்மின்ஸ் 78 72
கேதார் ஜாதவ் (சி) ஹேண்ட்ஸ்காம்ப் (பி) ரிச்சர்ட்சன் 2 4
மணீஷ் பாண்டே நாட் அவுட் 36 32
எம்.எஸ்.தோனி நாட் அவுட் 3 6
உதிரிகள் 6 
மொத்தம் (47.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு) 294

விக்கெட் வீழ்ச்சி: 1-139 (ரோஹித்), 2-147 (ரஹானே), 3-203 (கோலி), 4-206 (ஜாதவ்), 5-284 (பாண்டியா).

பந்துவீச்சு: பட் கம்மின்ஸ் 10-0-54-2, நாதன் கோல்ட்டர் நீல் 10-0-58-1, கேன் ரிச்சர்ட்சன் 8.5-0-45-1, மார்கஸ் ஸ்டோனிஸ் 8-0-61-0, 
ஆஷ்டன் அகர் 10-0-71-1, கிளன் மேக்ஸ்வெல் 1-0-2-0.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com