இன்று முதல் கிரிக்கெட் போட்டிகளில் ‘ரெட் கார்டு’ அறிமுகம்: அமலுக்கு வந்துள்ள புதிய விதிமுறைகள்!

புதிய விதிமுறைப்படி நடுவருடனோ அல்லது களத்தில் மற்றவர்களுடனோ மோசமான மோதலில் ஈடுபடும்போது...
இன்று முதல் கிரிக்கெட் போட்டிகளில் ‘ரெட் கார்டு’ அறிமுகம்: அமலுக்கு வந்துள்ள புதிய விதிமுறைகள்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய கிரிக்கெட் விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. 

இன்று தொடங்கவுள்ள தென் ஆப்பிரிக்கா-வங்கதேசம், பாகிஸ்தான்-இலங்கை இடையிலான டெஸ்ட் தொடர்களில் புதிய விதிமுறைகள் பின்பற்றப்படவுள்ளன. எனினும் தற்போது நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் பழைய விதிமுறைகளே பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைப்படி நடுவருடனோ அல்லது களத்தில் மற்றவர்களுடனோ மோசமான மோதலில் ஈடுபடும்போது, சம்பந்தப்பட்ட வீரரை நடுவர் வெளியேற்ற முடியும். வெளியேற்றப்படும் வீரர், அந்த ஆட்டத்தின் எஞ்சிய பகுதிகளில் விளையாட முடியாது. அதாவது கால்பந்து விளையாட்டில் ரெட் கார்டு பெறுவதைப் போன்றதாகும்.

கிரிக்கெட் பேட்டின் அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பேட் நுனிப்பகுதியின் தடிமன் 40 மி.மீ. அளவுக்கு மிகாமலும், ஒட்டு மொத்த பேட்டின் தடிமன் 67 மி.மீ. அளவுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும். வீரர்கள் பயன்படுத்தும் பேட்டின் அளவில் ஏதாவது சந்தேகம் இருப்பின் அதை நடுவர் சோதனைக்கு உட்படுத்தலாம்.

டெஸ்ட் போட்டியில் 80 ஓவர்களுக்குப் பிறகு கூடுதலாக டிஆர்எஸ் வாய்ப்பு வழங்கப்படாது. ஓர் இன்னிங்ஸுக்கு இரு டிஆர்எஸ் வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படும். 

டி20 போட்டியிலும் இனி டிஆர்எஸ் பயன்படுத்தப்படும்.

ரன் அவுட் விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரையில் பந்து ஸ்டெம்பில் படுகிறபோது பேட்ஸ்மேனின் பேட் கிரீஸுக்குள் இருக்கும் தரைப் பகுதியை தொட்டவாறு இருக்க வேண்டும். ஆனால் புதிய விதிமுறைப்படி ஒரு பேட்ஸ்மேன் தனது பேட்டால் கிரீஸைத் தொட்டுவிட்டால், அதன்பிறகு பந்து ஸ்டெம்பில் படுகிறபோது அவருடைய பேட் கிரீஸுக்கு உட்பட்ட தரைப் பகுதியில் தொடாமல் மேல் நோக்கி இருந்தால் அவுட் கிடையாது. 

பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்கும்போது பீல்டர்களின் கால் பவுண்டரி எல்லைக்குள் இருக்க வேண்டும். மாறாக அவர்கள் பவுண்டரி எல்லையைத் தாண்டி பந்தைப் பிடித்தால், அது பவுண்டரியாக கணக்கில் கொள்ளப்படும்.

விக்கெட் கீப்பர், பீல்டர் ஆகியோரின் ஹெல்மெட்டில் பந்து பட்டு கேட்ச் ஆனால், சம்பந்தப்பட்ட பேட்ஸ்மேன் அவுட்டானதாக கருதப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com