சுடச்சுட

  

  சிறப்பாக விளையாடியும் இந்திய அணியிலிருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டது ஏன்?

  By சநகன்  |   Published on : 14th August 2017 11:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dk1

   

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த மணீஷ் பாண்டே, ஹைதராபாத்துக்கு எதிரான வெளியேற்றும் சுற்று ஆட்டத்துக்கு முன்னதாகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காயமடைந்தார். இதனால் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து மணீஷ் பாண்டே காயம் காரணமாக விலகினார். அவருக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். 

  இதன்பின்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்தது. அந்த அணியில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக், 2, 50* என ஓரளவு நன்றாக விளையாடி கேப்டன் கோலியின் நம்பிக்கையைப் பெற்றார். டி20 போட்டியில் 48 ரன்கள் எடுத்தபோது இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

  2004-இல் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமான தினேஷ் கார்த்திக், இதுவரை 73 ஒரு நாள் ஆட்டங்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 2014-இல் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய கார்த்திக், அதன்பிறகு சமீபத்தில்தான் இந்திய அணியில் இடம்பிடித்தார். 2016-17 ரஞ்சி சீசனில் 704 ரன்கள் குவித்ததோடு, விஜய் ஹசாரே டிராபி, தியோதர் டிராபி ஆகியவற்றில் 854 ரன்கள் குவித்தார். 10-ஆவது ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய கார்த்திக், 361 ரன்கள் குவித்தார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதன் அடிப்படையில் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார்.

  ஆனால் தினேஷ் கார்த்திக்குக்கு நேற்று ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒரெயொரு டி20 போட்டியில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். அதனால் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இருமுறை சிறப்பாக விளையாடியும் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறாததற்குக் காரணம், மணீஷ் பாண்டே மீண்டும் அணியில் நுழைந்ததனால்தான். இந்தியா ஏ அணியில் அவர் சிறப்பாக விளையாடி வருவதாலும் இதற்கு முன்பு காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகியதாலும் இந்தமுறை அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மணீஷுக்குப் பதிலாகத்தான் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் மணீஷ் முழு உடற்தகுதி அடைந்தது மட்டுமல்லாமல் தன்னுடைய பேட்டிங் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். எனவே தினேஷ் கார்த்திக் பின்னுக்குத் தள்ளப்பட்டு மணீஷ் பாண்டே தேர்வாகியுள்ளார்.

  இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் யாராவது காயம் காரணமாக விலக நேர்ந்தால் தினேஷ் கார்த்திக்குக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai