நிறைவேறாத ஆகஸ்ட் 15 ஏக்கமும் கோலி அணியின் சாதனைகளும்!

இலங்கை அணியால் இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியைக்கூட இதுவரை வெல்லமுடிந்ததில்லை...
நிறைவேறாத ஆகஸ்ட் 15 ஏக்கமும் கோலி அணியின் சாதனைகளும்!

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வி பெற்றுள்ளது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-0 என்கிற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. இலங்கையின் பல்லகெலேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்தது இந்திய அணி. ஷிகர் தவன் 119, பாண்டியா 108, ராகுல் 85 ரன்கள் குவிக்க, 114.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்தது இந்திய அணி. முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 37.4 ஓவர்களில் 135 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து பாலோ-ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி  181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி அடைந்துள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடி சதமெடுத்த ஹார்திக் பாண்டியா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரில் இரு சதங்கள் அடித்த தவன், தொடர் நாயகனாகத் தேர்வானார். 

இந்த டெஸ்ட் போட்டியை முன்வைத்து கோலியின் இந்திய அணி நிகழ்த்தியுள்ள சாதனைகள்:

* வெளிநாட்டு மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் எதிரணியை 'ஒயிட் வாஷ்' ஆக்கிய முதல் இந்திய அணி என்ற பெருமை கோலி படைக்குக் கிடைத்துள்ளது. 85 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எந்த அணியையும் 'ஒயிட் வாஷ்' ஆக்கியதில்லை.

* இலங்கை மண்ணில் இந்தியா இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இலங்கை மண்ணில் அதிக வெற்றிகளை பெற்ற வெளிநாட்டு அணிகளின் வரிசையில் பாகிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. இலங்கையில் இந்திய அணி பெற்றுள்ள 9-வது வெற்றி இது.

* இலங்கையில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக விளையாடிய கடைசி 5 டெஸ்டுகளையும் வென்றுள்ளது. ஆனால் இலங்கை அணியால் இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியைக்கூட இதுவரை வெல்லமுடிந்ததில்லை. 

* சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஓவர்களில் இலங்கையின் முதல் இன்னிங்ஸ்:

28.2 vs பாகிஸ்தான், 1994
34.2 vs ஆஸ்திரேலியா, 2016
37.4 vs இந்தியா, 2017

* முரளிதரனின் ஓய்வுக்குப் பிறகு இலங்கை அணி:

ஹெராத் விளையாடிய டெஸ்ட்டுகள்: போட்டிகள் 61, வெற்றி 21, தோல்வி 26, டிரா 14
ஹெராத் விளையாடாத டெஸ்ட்டுகள்: போட்டிகள் 7, வெற்றி 0, தோல்வி 4, டிரா 4

* இந்த டெஸ்ட் தொடரில் எந்தவொரு இந்திய வீரரும் டக் அவுட் ஆகவில்லை. 3 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் 5 முறை இதுபோன்று இந்திய அணிக்கு நிகழ்ந்துள்ளது. அதில் நான்குமுறை இலங்கை அணிக்கு எதிராக. 

* இந்திய அணி இதுவரை ஆகஸ்ட் 15 அன்று வெற்றி பெற்றதேயில்லை. ஒருவேளை இந்த டெஸ்ட் போட்டி நாளை வரை நீண்டிருந்தால் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும். எனவே இந்திய அணி அடுத்தவருடம் வரை இந்த அதிர்ஷ்டத்துக்குக் காத்திருக்கவேண்டியதுதான். 

* ஒரு கண்டத்தில் குறைந்த டெஸ்ட்டுகளில் 250 விக்கெட்டுகள்

39 - அஸ்வின்
46 - கும்ப்ளே
47 - முரளிதரன்
48 - ஹாட்லி

* இந்தியாவின் இந்த ஒயிட்வாஷ்-க்குப் பிறகு எந்த அணி இதே சாதனையைச் செய்தது? 2006-ல் தென் ஆப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவை 3-0 எனத் தோற்கடித்தது. 

* முதல் 29 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு அதிக வெற்றிகளைக் கண்ட கேப்டன்
21 - ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங்
19 - விராட் கோலி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com