நங்கூரமாய் நின்ற நியூஸிலாந்து: 34 ஆண்டுகளுக்கு பின்பு டெஸ்ட் தொடரை வென்றது

இங்கிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து கைப்பற்றியது.
நங்கூரமாய் நின்ற நியூஸிலாந்து: 34 ஆண்டுகளுக்கு பின்பு டெஸ்ட் தொடரை வென்றது

நியூஸிலாந்து சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் மார்ச் 22 முதல் மார்ச் 26 வரை நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து 2-ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 30 தொடங்கி ஏப்ரல் 3 வரை கிறைஸ்ட்சர்ச்சில் அமைந்துள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடந்தது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. 

இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 101 ரன்கள் சேர்த்தார். நியூஸிலாந்தின் டிம் சௌத்தி 6 விக்கெட்டுகளும், ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸில் ஆடிய நியூஸிலாந்து 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பி.ஜே.வாட்லிங் 85 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் சேர்த்தது. ஜேம்ஸ் வின்ஸ் 60, ஸ்டோன்மேன் 76, ஜோ ரூட் 54, டேவிட் மாலன் 53 ஆகியோர் ரன்கள் எடுத்தனர். நியூஸிலாந்தின் கிராண்ட்ஹோமி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்நிலையில், 382 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்தின் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. டாம் லாதம் 83,
கிராண்ட்ஹோமி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமானது. 

அப்போது தடுப்பாட்டம் ஆடிய இஷ் சோதி 168 பந்துகளை எதிர்கொண்டு 56 ரன்களும், நீல் வேக்னர் 103 பந்துகளை சந்தித்து 7 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். இதனால் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. இதனால் வெற்றிகரமாக டிரா செய்தது. 

இதையடுத்து நியூஸிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. இதில் ஆட்ட நாயகனாக டிம் சௌத்தி மற்றும் தொடர் நாயகனாக டிரெண்ட் போல்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன்மூலம் 1984-ஆம் ஆண்டுக்குப் பிறகு 34 ஆண்டுகால இடைவேளைக்கு பின்னர் நியூஸிலாந்து அணி தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

அதுபோல 1999-ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியுள்ளது.

இதுவரை இங்கிலாந்துக்கு எதிராக நியூஸிலாந்து அணி வென்றுள்ள தொர்கள்:

  • 1983/84-ல் நியூஸிலாந்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என வென்றது.
  • 1986-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என வென்றது.
  • 1999-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வென்றது.
  • 2017/18-ல் நியூஸிலாந்தில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என வென்றது.

2017-18 சீசனில் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்களில் நியூஸிலாந்து அணி:

  • மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக 2-0 மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.
  • மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக 3-0, பாகிஸ்தானுக்கு எதிராக 5-0 என்ற கணக்கில் வயிட்-வாஷ் வெற்றிபெற்று ஒருநாள் தொடர்களை கைப்பற்றியது. 2-3 என்ற கணக்கில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வியுற்றது.
  • மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக 2-0 என டி20 தொடரை வென்றது, 1-2 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது, முத்தரப்பு டி20 இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com