492 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை நசுக்கி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இத்துடன் சர்வதேசப் போட்டிகளில் இருந்து மார்னி மார்கல் ஓய்வு பெற்றார்.
492 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை நசுக்கி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.

இதையடுத்து நடைபெற்ற 2-ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த டெஸ்ட் போட்டியின் போது இரு அணி வீரர்களுக்கு இடையிலான மோதல் அதிகரிக்கத் துவங்கியது. குறிப்பாக டேவிட் வார்னர், நாதன் லயன் ஆகியோரின் செயல் கடும் விமரிசனத்துக்குள்ளானது.

இந்நிலையில், 3-ஆவது டெஸ்ட் போட்டியின் இடையில் ஆஸ்திரேலிய வீரர் பென்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது அம்பலமானது. இதற்கு முழுப் பொறுப்பேற்றுக்கொள்வதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார். இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்தது. எனவே இச்செயலுக்கு காரணமாக ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் பென்கிராஃப்ட் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு 1 டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்தது. 

இதுகுறித்து விசாரித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம், ஸ்மித் மற்றும் வார்னருக்கு 1 வருட தடையும், பென்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்களுக்கு தடை விதித்தது. இதற்கிடையில் இந்தப் போட்டியின் மத்தியில் ஆஸ்திரேலிய கேப்டன் பொறுப்பில் இருந்தும் ஸ்மித் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டிம் பெய்ன் நியமிக்கப்பட்டார். பரபரப்புக்கு சற்றும் பஞ்சமில்லாத இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபாரமாக விளையாடி 322 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஏப்ரல் 30-ஆம் தேதி தொடங்கி நடந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 488 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மர்க்ராம் 152 ரன்கள் விளாசினார். ஆஸி.யின் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டிம் பெய்ன் 62, கவாஜா 53, கம்மின்ஸ் 50 ரன்கள் சேர்த்தனர். பிளாண்டர், ரபாடா, மஹாராஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் டூபிளெஸிஸ் 120 ரன்கள் குவித்தார். 

இந்நிலையில், 612 என்ற இமாலய இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா 119 ரன்களுக்குச் சுருண்டது. தென் ஆப்பிரிக்காவின் பிளாண்டர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் 492 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றிபெற்று 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதில் ஆட்டநாயகனாக பிளாண்டர் மற்றும் தொடர் நாயகனாக ரபாடா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த தொடருடன் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் மார்னி மார்கல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த போட்டியின் மூலம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சில சாதனைகளைப் படைத்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு...

தென் ஆப்பிரிக்க அணி 1991-92 காலகட்டத்தில் மீண்டும் சர்வதேச அங்கீகாரம் கிடைத்த பின்னர் தற்போது தான் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது. அதுபோல ஆஸ்திரேலியாவுக்கு ரன்கள் அடிப்படையில் இது 2-ஆவது மிகப்பெரிய தோல்வியாகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்படையில் பெற்ற மிகப்பெரிய வெற்றிகள்:

  • 1928-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 675 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது (இது பிராட்மேனுக்கு அறிமுகப் போட்டியாகும்).
  • 1934-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 562 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
  • 1911-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 530 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
  • 2018-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
  • 2004-ல் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 491 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.


தென் ஆப்பிரிக்கா அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது:

  • 1966/67-ல் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என வென்றது.
  • 1969/70-ல் 4 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என வென்றது.
  • 2017/18-ல் 4 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என வென்றது.

முதல் போட்டியில் தோற்ற பிறகு தொடரை வென்ற அணிகள்:

  • 1950 - இங்கிலாந்துக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள்
  • 1951 - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து
  • 1954/55 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து
  • 1968/69 - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா
  • 1981 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து
  • 2000 - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இங்கிலாந்து
  • 2014 - இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து
  • 2017/18 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா


ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த நாட்டில் நடைபெற்ற தொடர் மற்றும் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர் என இரண்டிலும் வீழ்த்திய முதல் தென் ஆப்பிரிக்க கேப்டன் எனும் பெருமையை டூ பிளெஸிஸ் பெற்றார்.


2-ஆம் உலகப் போருக்கு பின்னர் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த நாட்டிலும், தங்கள் சொந்த மண்ணிலும் வீழ்த்திய கேப்டன்கள்:

  • எல்.ஹட்டன்
  • எம்.பிரேர்லி
  • கிளைவ் லாய்ட்
  • விவியன் ரிச்சர்ட்ஸ்
  • ஜே.கோனி
  • ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ்
  • டூ பிளெஸிஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com