சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

பரபரப்பான ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது...

News image
Updated On :6 ஏப்ரல் 2018, 12:26 pm

எழில்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாகபுரியில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி நெருக்கடியை எதிர்கொண்டது. 21-வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் என்கிற நிலைமைக்குச் சென்றது. தொடக்க வீராங்கனை டேமி 37 ரன்கள் எடுத்தார். நடுவரிசை வீராங்கனை வில்சன் 45 ரன்களும் பின்வரிசை வீராங்கனை ஹஸெல் 33 ரன்களும் எடுத்து அணியின் சரிவை ஓரளவு கட்டுப்படுத்தினார்கள்.

இங்கிலாந்து மகளிர் அணி 49.3 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய மகளிர் அணித் தரப்பில் பூணம் யாதவ் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏக்தா, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுளை வீழ்த்தினார்கள். 

இதையடுத்து எளிதான இலக்கை அடைய இந்திய அணிக்குப் பெரிய சிரமம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடக்க வீராங்கனை மந்தனா இன்றும் பிரமாதமாக விளையாடி அரை சதமெடுத்தார். ஆனால் நடுவரிசை மற்றும் பின்வரிசை வீராங்கனைகள் பலர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது. மந்தனா 86 ரன்களிலும் தீப்தி சர்மா 24 ரன்களிலும் ஆட்டமிழந்தபோது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் 190 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை அடைந்தது. எனினும் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஏக்தாவும் பூணம் யாதவும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்கள்.

மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து வெற்றியடைந்தது. இதனால் ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.