காமன்வெல்த் 9-ம் நாள்: துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டை!

கடந்த 5-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன...
காமன்வெல்த் 9-ம் நாள்: துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டை!

காமன்வெல்த் போட்டியின் 9-வது நாளான இன்றும் இந்திய வீரர்கள் பதக்க வேட்டை நடத்தி வருகிறார்கள். 

கடந்த 5-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. 71 நாடுகளைச் சேர்ந்த 4500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 226 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்டவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 25 மீ. ரேபிட் ஃபயர் இறுதிச்சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த 15 வயது அனிஷ் பன்வாலா தங்கம் வென்றுள்ளார். இதையடுத்து காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இளம் இந்திய வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

அனிஷ் பன்வாலா ஹரியானாவைச் சேர்ந்தவர். முன்னாள் வீரர் ஜஸ்பால் ரானா இவருடைய பயிற்சியாளர். 

துப்பாக்கி சுடுதலில் ஏற்கெனவே இந்தியா தனது முத்திரையை பதித்துள்ள நிலையில் வியாழக்கிழமை மகளிர் 50 மீ ரைபிள் ப்ரோன் பிரிவில் தேஜஸ்வினி வெள்ளிப் பதக்கம் வென்றார். இளம் வீராங்கனை அஞ்சும் மொட்கில் 16-வது இடத்தையே பெற முடிந்தது.

இந்நிலையில் இருவருமே இன்று பதக்கம் பெற்று இந்தியாவுக்கு மேலும் பெருமை தேடித்தந்துள்ளார்கள். 50 மீ. ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் 457.9 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் 37 வயது தேஜஸ்வினி. அஞ்சும் 544.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்று இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கத்தை தேஜஸ்வினியுடன் இணைந்து நிலைநாட்டியுள்ளார்.

தேஜஸ்வினி வெல்லும் 7-வது காமன்வெல்த் பதக்கமாகும் இது. 2006 முதல் அவர் 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை காமன்வெல்த் போட்டியில் பெற்றுள்ளார்.

மல்யுத்தப் போட்டிகளில் பதக்க வேட்டை

ஆடவருக்கான 65 கிலோ பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார். வேல்ஸைச் சேர்ந்த கேன் சாரிக்கை ஒரு நிமிடத்துக்குள் வீழ்த்தி 10-0 என்கிற புள்ளிக்கணக்கில் வென்று அசத்தினார். 

மகளிருக்கான 68 கிலோ பிரிவில் இந்தியாவின் திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.  

மகளிருக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவின் பூஜா தண்டா வெள்ளிப் பதக்கம் வென்றார். மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் நைஜீரியாவைச் சேர்ந்த ஒடுநயோ 7-5 என்கிற புள்ளிக் கணக்கில் பூஜாவை வீழ்த்தி தங்கம் வென்றார். 

ஆடவருக்கான குத்துச்சண்டைப் போட்டியில் 91 கிலோ பிரிவில்  இந்தியாவின் நமன் தன்வார் தோற்றுப்போனார். இதனால் அவருக்கு வெண்கலம் கிடைத்தது. தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நமன் தன்வார், அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜேஸன் வாடேலேவின் பின் மண்டையில் தாக்கினார். இதனால் அவருக்கு அபராதப் புள்ளிகள் கிடைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com