
வெளிநாடுகளில் இந்திய அணி விளையாடும்போது பெரிய பிரச்னையாக இருப்பது நீண்ட நேரம் நிலைக்காத தொடக்க வீரர்கள்தாம். இதனால் அடுத்து வருகிற வீரர்களுக்கு அழுத்த ஏற்பட்டு அவர்களும் விக்கெட்டுகளை இழக்க நேரிடும். எப்போது வெளிநாடு சென்றாலும் இதே கதை தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.
ஆனால் மெல்போர்னில் இந்திய ரசிகர்களுக்குப் புதிய அனுபவம் கிடைத்தது. மயங்க் அகர்வால் - விஹாரி என புதிய ஜோடி தொடக்க வீரர்களாகக் களமிறங்கியது. மயங்க் அகர்வாலுக்கு இது முதல் டெஸ்ட். அதேபோல விஹாரியும் சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாகத் தொடக்க வீரராகக் களமிறங்குகிறார். இதனால் ஆஸி. அணியின் பந்துவீச்சுக்கு இவர்கள் தாக்குப்பிடிப்பார்களா என்கிற கேள்வி எழுந்தது.
ஆனால் ஓரளவு பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்தில் அருமையாக ஆடினார்கள் மயங்க் அகர்வாலும் விஹாரியும். முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்தார்கள். இதன்பிறகு, இருவரும் 18.5 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து ஆடி அடுத்து வருகிற பேட்ஸ்மேன்களுக்குப் பெரிதும் உதவினார்கள். தான் சந்தித்த 25-வது பந்தில்தான் முதல் ரன்னை எடுத்தார் விஹாரி. கடைசியில் 66 பந்துகள் வரை எதிர்கொண்டு 6 ரன்கள் மட்டும் சேர்த்த விஹாரி, கம்மின்ஸின் பவுன்சரில் ஆட்டமிழந்தார்.
பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக ஆடுகளங்களைக் கொண்ட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் இதற்கு முன்பு சமீபகாலமாக இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இவ்வளவு ஓவர்கள் வரை விளையாடியதில்லை. 2010-ல் தென் ஆப்பிரிக்கா - செஞ்சுரியனில் சேவாக்கும் கம்பீரும் முதல் விக்கெட்டுக்கு 29.3 ஓவர்கள் வரை நின்று சாதனை செய்தார்கள். அதன்பிறகு அந்த நாடுகளில் இந்தியத் தொடக்க வீரர்கள் விளையாடிய 67 இன்னிங்ஸில் தற்போது மயங்க் அகர்வாலும் விஹாரியும் விளையாடிய 18.5 ஓவர்கள் தான் அதிகமானது. இதனால் இந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அதிக ஸ்கோர் எடுக்க மயங்க் அகர்வாலும் விஹாரியும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.