443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த இந்திய அணி! அரை சதமெடுத்தார் ரோஹித் சர்மா

இதன்பிறகு 6 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது...
443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த இந்திய அணி! அரை சதமெடுத்தார் ரோஹித் சர்மா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 443 ரன்களுடன் டிக்ளேர் செய்துள்ளது.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் நாள் முடிவில் 89 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. புஜாரா 68, கோலி 47 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் இன்று புஜாரா தனது சதத்தையும் கோலி அரை சதத்தையும் பூர்த்தி செய்தார்கள். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி 82 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா 106 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்களை விடவும் சற்று விரைவாக ரன்கள் எடுத்த ரஹானே, 34 ரன்களில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அதன்பிறகு ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மாவும் ரிஷப் பந்தும் 20 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய அணி மேலும் வெறுப்பேற்றினார்கள். நீண்ட நேரம் மைதானத்தில் இருந்ததால் கேட்சுகளையும் நழுவ விட்டார்கள் ஆஸி. வீரர்கள். இதனால் பாதுகாப்பாக 400 ரன்களை எட்டியது இந்திய அணி. 97 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ரோஹித் சர்மா. ஆகஸ்ட் 2015-க்குப் பிறகு வெளிநாடுகளில் அவர் அடிக்கும் சதம் இது. 166 ஓவர்களுக்குப் பிறகு புதிய பந்தைத் தேர்வு செய்தது ஆஸ்திரேலியா. 76 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜடேஜா 4 ரன்களில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்களுடன் டிக்ளேர் செய்துள்ளது இந்திய அணி. 63 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் ரோஹித் சர்மா. 

இதன்பிறகு 6 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரிஸ் 5, ஃபிஞ்ச் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com