முத்தரப்பு டி20 தொடர் முதல் போட்டியில் நியூஸி.யை வீழ்த்திய ஆஸி.

முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது.
முத்தரப்பு டி20 தொடர் முதல் போட்டியில் நியூஸி.யை வீழ்த்திய ஆஸி.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

இதன் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டேவிட் வார்னர், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக காலின் டி கிராண்ட்ஹோமி, 3 சிக்ஸர்களின் உதவியுடன் 38 ரன்கள் விளாசினார். மூத்த வீரர் ராஸ் டெய்லர் 24 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஆண்ட்ரூ டை 4 விக்கெட்டுகளும், பில்லி ஸ்டான்லேக் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதற்கிடையில் மழை காரணமாக 2-ஆம் பகுதி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆட்டம் 15 ஓவர்களாகவும், வெற்றி இலக்கு 90 ரன்களாகவும் குறைக்கப்பட்டது. 

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 10 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த கிறிஸ் லின் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர்.

கிறிஸ் லின் 44 ரன்களில் வெளியேற, கடைசி வரை களத்தில் நின்ற மேக்ஸ்வெல் 40 ரன்களுடன் அணியை வெற்றிபெற வைத்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 11.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com