சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளராக மைக்கேல் ஹஸ்ஸி நியமனம்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளராக மைக்கேல் ஹஸ்ஸி நியமனம்

2 வருட தடைக்குப் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 11-ஆவது சீசனில் மீண்டும் களமிறங்குகிறது. ஐபிஎல் போட்டிகள் துவங்கிய 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை நடைபெற்ற 8 சீசன்களிலும் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகும்.

மேலும், இரு முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இருமுறை 2-ஆம் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில், அடுத்து நடைபெறவுள்ள 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் ஜனவரி 27,28 ஆகிய தேதிதகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, 2018-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை 11-வது சீசன் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதற்கிடையில், ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்க வைக்கும் நடைமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதன் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைத்தது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய மற்றும் சிஎஸ்கே அணிகளின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி (வயது 42), நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அணி மேலாளர் கே.ஜார்ஜ் ஜான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உலகின் சிறந்த கிரிக்கெட் அறிவு கொண்டவர் ஹஸ்ஸி எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் ஹஸ்ஸி கூறியதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகிற ஐபிஎல் சீசனில் மீண்டும் களமிறங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதுபோல ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்பதை நான் அறிவேன். அதிலும் குறிப்பாக நான் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்புவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. அணி வீரர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, திறமையை ஊக்குவித்து பயிற்சி அளிப்பது சிறந்த பணியாகும். இதன்மூலம் சிஎஸ்கே மீண்டும் சாம்பியனாக வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.

மிஸ்டர் கிரிக்கெட் என்று அழைக்கப்படும் மைக்கேல் ஹஸ்ஸி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 7 சீசன்களாக விளையாடியவர் ஆவார். அவற்றில் சுரேஷ் ரெய்னா (3,699), மகேந்திர சிங் தோனி (2,987), ஆகியோருக்கு அடுத்தபடியாக சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மைக்கேல் ஹஸ்ஸி (1,768) ரன்களுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com