தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா சுமார் ஓராண்டுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார்.
கடைசியாக அவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றிருந்தார். அதன் பிறகு உடற்தகுதி பிரச்னைகள் காரணமாக அணிக்கு திரும்பாமல் நீடித்து வந்தவர், சமீபத்தில் சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். அத்துடன், உடற்தகுதிக்கான "யோ யோ' சோதனையிலும் தேர்ச்சி பெற்ற நிலையில் தற்போது அணிக்குத் திரும்பியுள்ளார். அவரோடு, இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த புவனேஷ்வர் குமார், ஷிகர் தவன் ஆகியோரும் அணியில் இணைந்துள்ளனர்.
இதனால், இலங்கை தொடரில் இருந்த தீபக் ஹூடா, முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், பாசில் தாம்பி ஆகிய இளம் வீரர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை. எனினும், ஷர்துல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட், அக்ஸர் படேல் ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் பிப்ரவரி 18-ஆம் தேதி ஜோஹன்னஸ்பர்க்கிலும், அடுத்த ஆட்டம் 21-ஆம் தேதி செஞ்சுரியனிலும், கடைசி ஆட்டம் 24-இல் கேப் டவுனிலும் நடைபெறுகிறது.
டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவன், லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி, தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே, அக்ஸர் படேல், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயதேவ் உனத்கட், ஷர்துல் தாக்குர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.