இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே நாளை முதல் ஒருநாள் 

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே முதல் ஒருநாள் போட்டி டர்பனில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே நாளை முதல் ஒருநாள் 

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா தொடரை வென்றது. இருப்பினும் கடைசி போட்டியில் இந்திய அணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. இதையடுத்து 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வியாழக்கிழமை தொடங்கி நடைபெறகிறது. பின்னர் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.

இதுவரை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் இந்திய அணி...

1992-93 தொடரில் 2-5 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது
2006-07 தொடரில் 0-4 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது
2010-11 தொடரில் 2-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது
2013-14 தொடரில் 0-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது

அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்காவுடன் 1996-97 தொடரில் ஜிம்பாப்வே மற்றும் 2001-02 தொடரில் கென்யா ஆகிய நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர்களிலும் இந்தியா பங்கேற்றது. இவற்றிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று வாகை சூடியது.

இந்நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைபெறும் ஒருநாள் தொடரில் முதன்முறையாக வெற்றிபெறும் உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. டெஸ்ட் தொடரைப் போன்று ஒருநாள் அணி தேர்வுகளிலும் விராட் கோலியின் அணுகுமுறை கேள்விக்குறியாகவே உள்ளது.

ஒருநாள் போட்டிகளில் எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்த ஒரு அணிக்கெதிராகவும் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று தென் ஆப்பிரிக்க நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஜே.பி.டுமினி தெரிவித்துள்ளது இங்கே கவனத்துக்குரியது.

2019 உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 14 மாதங்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் அதன் சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கிறது.

எனவே இனிவரும் தொடர்களில் ஆடும் லெவன் தொடர்பான சோதனைகளில் இந்திய அணி ஈடுபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தவன், ரோஹித், கோலி, தோனி, ஆகியோர் பேட்டிங்கில் நிரந்தர இடம்பிடித்தாலும், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, அஜிங்க்ய ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தொடர்ந்து மீதமுள்ள இடங்களில் சுழற்சி முறையில் களமிறங்க வாய்ப்புள்ளது.

அதுபோல பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக செயல்பட்டாலும் அவரின் இடம் கோலியின் திடீர் நடவடிக்கைகளால் கேள்விக்குரியாகவே உள்ளது. மேலும் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் இந்த தொடரில் இடம்பெற்றுள்ளனர். இதில் ஹார்திக் பாண்டியா ஆல்-ரவுண்டர் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம்.

சுழற்பந்துவீச்சில் டெஸ்ட் தொடர்களில் இடம்பெறும் அஸ்வின், ஜடேஜா சமீப காலமாக ஒருநாள் தொடர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் ஒருநாள் தொடர்களில் இடம்பெற்றுள்ள, சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை அள்ளி வருகின்றனர். எனவே அவர்களுக்கு இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தொடர்ந்து இடமளிக்கப்பட்டு வருகிறது.

எது எப்படி இருந்தாலும் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி, தான் எடுத்த 'திடுக்' முடிவுகளால் ஏற்பட்ட விளைவுகளில் இருந்து பாடம் கற்றாரா? என்பதை இந்த ஒருநாள் தொடர் வெளிப்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை.

ஒருநாள் போட்டித் தொடர் விவரம் பின்வருமாறு:

  • முதல் ஒருநாள் - டர்பன் - பிப்ரவரி 1
  • 2-ஆவது ஒருநாள் - சென்சூரியன் - பிப்ரவரி 4
  • 3-ஆவது ஒருநாள் - கேப்டவுன் - பிப்ரவரி 7
  • 4-ஆவது ஒருநாள் - ஜொஹன்னஸ்பர்க் - பிப்ரவரி 10
  • 5-ஆவது ஒருநாள் - போர்ட் எலிசபத் - பிப்ரவரி 13
  • 6-ஆவது ஒருநாள் - சென்சூரியன் - பிப்ரவரி 16


ஒருநாள் போட்டித் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி விவரம் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர்.

தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:

டூபிளெஸிஸ் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஜே.பி.டுமினி, மர்கராம், டேவிட் மில்லர், மோர்னே மார்கல், கிறிஸ் மோரிஸ், நிகிடி, ஃபெலுக்வாயோ, ரபாடா, ஷம்ஸி, ஸோன்டோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com