6-இல் உலகக் கோப்பை காலிறுதி ஆட்டங்கள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முக்கிய கட்டமான காலிறுதி ஆட்டங்கள் வரும் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.
Updated on
2 min read

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முக்கிய கட்டமான காலிறுதி ஆட்டங்கள் வரும் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.
மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் கடந்த ஜூன் 14-ஆம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. 
32 அணிகள் பங்கேற்ற தகுதி சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 16 அணிகள் வெளியேறிய நிலையில் ஏனைய 16 அணிகள் தகுதி பெற்ற ரவுண்ட் 16 எனப்படும் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ளவையாக கருதப்பட்ட ஆர்ஜென்டீனா, போர்ச்சுகல், ஸ்பெயின் அணிகள் தோல்வியடைந்து வெளியேறின. உலகக் கோப்பையின் முக்கிய கட்டமான காலிறுதி ஆட்டங்கள் 6-ஆம் தேதி தொடங்குகின்றன. 

உருகுவே-பிரான்ஸ்
முன்னாள் சாம்பியன்கள் உருகுவே-பிரான்ஸ் உள்ளிட்டவை இரவு 7.30 மணிக்கு நிஷ்னி நோவ்கோகிராட் மைதானத்தில் நடைபெறும் முதல் காலிறுதி ஆட்டத்தில் மோதுகின்றன. உருகுவே அணியைக் காட்டிலும் பிரான்ஸ் அணி சற்று பலம் வாய்ந்ததாக உள்ளது.
உலகக் கோப்பையில் இரு அணிகளும் மோதியதில் உருகுவே இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை. பிரான்ஸ் அணியில் மாப்பே, கிரைஸ்மேன், ஜிரார்ட், போக்பா உள்ளிட்ட சிறந்த வீரர்களும், உருகுவே அணியில் கேவனி, சான்செஸ், முஸ்லெரா உள்ளிட்டோரும் 
உள்ளனர். இதில் வெற்றி பெறும் அணி பிரேஸில்-பெல்ஜிய அணிகள் ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் அரையிறுதியில் மோதும்.

பிரேஸில்-பெல்ஜியம்
கஸான் மைதானத்தில் நள்ளிரவு 11.30 மணிக்கு 5 முறை சாம்பியன் பிரேஸில், பெல்ஜியம் அணிகள் மோதும் காலிறுதி ஆட்டம் நடக்கிறது. இரு அணிகளுமே பட்டம் வெல்பவையாக கருதப்படுகின்றன. ரெட் டெவில்ஸ் எனப்படும் பெல்ஜிய அணி வலுவான அணியை கட்டமைத்துள்ளது. அந்தஅணியில் ரொமேலு லுகாகு உலகின் சிறந்த முன்கள தாக்குதல் வீரர்களில் ஒருவராக உள்ளார். 
அதே நேரத்தில் 5 முறை சாம்பியன், 6 முறை அரையிறுதிக்கு தகுதி போன்ற பெருமைகளை பிரேஸில் கொண்டுள்ளது. அதன் நட்சத்திர வீரர் நெய்மர், குட்டின்ஹோ, ஆகியோர் அபார பார்மில் உள்ளனர். இரு அணிகளும் 4 முறை மோதியதில் 3 முறை பிரேஸில் வென்றுள்ளது.

ரஷியா-குரோஷியா
ரஷியா-குரோஷியா அணிகளுக்கு இடையிலான காலிறுதி ஆட்டம் 7-ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு சோச்சி பிஷ்ட் மைதானத்தில் நடக்கிறது. பிஃபா தரவரிசையில் 70-ஆவது இடத்தில் உள்ள ரஷிய அணி தொடக்க சுற்றில் அபாரமாக விளையாடியது. உருகுவே அணியிடம் தோற்றாலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அதே நேரத்தில் வலுவான ஸ்பெயின் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் கோல்கீப்பர் அகின்பீவ், செர்ஷேவ், சிறந்த பார்மில் உள்ளனர். குரோஷிய அணி கடந்த 1998 உலகக் கோப்பையில் 3-ஆவது இடம் பெற்றது. அந்த அணியில் மொட்ரிக், கோல்கீப்பர் சுபாஸிக் சிறப்பான பார்மில் உள்ளனர். ரஷியா, குரோஷியா இரு அணிகளும் நாக் அவுட் சுற்றில் பெனால்டி ஷூட் முறையில் வென்று காலிறுதிக்கு முன்னேறின என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com