
இங்கிலாந்தின் முன்னணி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் இங்கிலாந்து அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் 6 விக்கெட்டுகள் எடுக்க, ரோஹித் சர்மா 137 ரன்கள் குவித்தார். இருவருடைய அபாரமான பங்களிப்பினால் இந்திய அணி முதல் ஒருநாள் ஆட்டத்தில் வென்றுள்ளது.
இதையடுத்து ஒருநாள் தொடரில் பின்தங்கியுள்ள இங்கிலாந்து அணிக்கு மேலும் ஒரு நெருக்கடியாக முன்னணி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
டி20 தொடரில், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் அலெக்ஸ் ஹேல்ஸ். 41 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதனால் அந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகனாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் சிறப்பாக விளையாடி வரும் குல்தீப் யாதவ் அந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்தார். இதனால் அடுத்த ஆட்டத்தில் அவர் நீக்கப்பட்டார். குல்தீப் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தது மட்டுமல்லாமல் அவருடைய பந்துவீச்சையும் சிறப்பாக எதிர்கொண்டார் ஹேல்ஸ்.
இந்நிலையில் வலைப்பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதையடுத்து ஒருநாள் தொடரிலிருந்து ஹேல்ஸ் விலகியுள்ளார். காயத்திலிருந்து மீண்டு வர அதிகபட்சமாக நான்கு வாரங்கள் வரை ஆகலாம் என்பதால் அவருக்குப் பதிலாக டேவிட் மலான் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் (5, 26, 147,34*, 20,) மற்றும் டி20 தொடரில் (49,8) மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் (8, 58*, 30) சிறப்பாக விளையாடிய ஹேல்ஸ், ஒருநாள் தொடரில் காயம் காரணமாக விலகியிருப்பது இங்கிலாந்துக்கு அணிக்குப் புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.