தொடர்ந்த பெங்களூர் டி20 சோகம்: கடைசி ஓவரில் மீண்டும் சொதப்பி மே.இ. அணியிடம் பரிதாபமாகத் தோற்ற வங்கதேச அணி!

சிக்ஸர் ஷாட் அடிக்க முயன்று அவுட் ஆகி வங்கதேச ரசிகர்களைச் சோகப்படுத்தினார்... 
தொடர்ந்த பெங்களூர் டி20 சோகம்: கடைசி ஓவரில் மீண்டும் சொதப்பி மே.இ. அணியிடம் பரிதாபமாகத் தோற்ற வங்கதேச அணி!

2016-ம் வருடம் பெங்களூரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் சொதப்பி தோற்ற சம்பவத்தை வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது. நேற்று, அந்தச் சோகத்தை அவர்கள் மீண்டும் அனுபவித்துள்ளார்கள்.

கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 49.3 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 21 வயது ஷிம்ரோன் ஒடிலோன் ஹெட்மயர் சிறப்பாக விளையாடி, 93 பந்துகளில் 7 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் எடுத்தார். பவல் 44 ரன்கள் எடுத்தார். 

இந்த இலக்கைத் திறமையாக எதிர்கொண்டது வங்கதேச அணி. தமிம் இக்பால், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம் ஆகியோர் அரை சதமெடுத்தார்கள். 45-வது ஓவரின் முடிவில் 30 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 7 விக்கெட்டுகள் மீதமிருந்தன. முஷ்ஃபுகுர் 48 ரன்களுடனும் மஹ்முதுல்லா 39 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள். இதனால் வங்கதேச அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே மஹ்முதுல்லா ஆட்டமிழந்தார். இதனால் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. எனினும் கடைசி 2 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஆனால் 49-வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தது வங்கதேசம். சபிர் ரஹ்மான் 12 ரன்களில் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவர்: 6 பந்துகள், 8 ரன்கள், 5 விக்கெட்டுகள் கைவசம். முஷ்ஃபிகுர்  68 ரன்கள்*. 

இதைவிடவும் சாதகமான நிலை கிடைக்குமா?

ஆனால் ஹோல்டர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே முஷ்ஃபிகுர் ஆட்டமிழந்தார். ஃபுல்டாஸ் பந்தை சிக்ஸ் அடிக்க முயன்று பாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பெங்களூரில் எப்படி ஆட்டமிழந்தாரோ அதேபோல சிக்ஸர் ஷாட் அடிக்க முயன்று அவுட் ஆகி வங்கதேச ரசிகர்களைச் சோகப்படுத்தினார். அதன்பிறகு வங்கதேச வீரர்கள் ரன் எடுக்க மிகவும் திணறினார்கள். கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவை என்கிற நிலைமையில் மொர்டாஸாவினால் ஒரு ரன் மட்டுமே எடுக்கமுடிந்தது. இதனால் 268 ரன்கள் மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்றது வங்கதேச அணி. 

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com