எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை: விமரிசனங்களுக்கு அடில் ரஷித் பதிலடி!

அவர் என்ன சொல்கிறார் என்பதில் யாரும் அக்கறை செலுத்துவதில்லை. சிலசமயங்களில்...
எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை: விமரிசனங்களுக்கு அடில் ரஷித் பதிலடி!

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி 20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி 20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றன. இந்நிலையில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பர்மிங்ஹாமில் தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசியதோடு கோலிக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கிய அடில் ரஷித் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

சென்னையில் 2016 டிசம்பரில் நடைபெற்ற டெஸ்ட் தான் அடில் ரஷித் கடைசியாக விளையாடியது. 10 டெஸ்டுகள் மட்டுமே விளையாடியுள்ள ரஷித், கடந்த பிப்ரவரி மாதம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்தார். இனிமேல் ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவதாகவும் அறிவித்தார். ஆனால் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு மீண்டும் தேர்வாகியுள்ளார் அடில் ரஷித். இவர் இதற்கு முன்பு விளையாடிய 10 டெஸ்டுகளும் வெளிநாடுகளில் விளையாடியவை. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றால் தன் சொந்த மண்ணில் அவர் விளையாடக்கூடிய முதல் டெஸ்டாக அமையும். 

இந்நிலையில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடாத ரஷித்தை டெஸ்ட் அணியில் சேர்த்துக் கொண்டதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. யார்க்‌ஷையர் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ட்விட்டரில் கூறியதாவது: அடில் நல்ல பந்துவீச்சாளர். ஆனால் நான்கு நாள் ஆட்டத்தில் கலந்துகொள்ளாத வீரரை டெஸ்ட் அணிக்குச் சேர்த்துக்கொண்டதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது என்று ரஷித்தை விமரிசனம் செய்தார். மேலும் ஒரு கட்டுரையிலும் ரஷித்தின் தேர்வை விமரிசனம் செய்தார்.

இதையடுத்து தன் மீதான விமரிசனங்களுக்கு அடில் ரஷித் பதில் அளித்துள்ளதாவது:

மைக்கேல் வானின் கருத்துகளை யாரும் பொருட்படுத்துவதில்லை. அவர் என்ன சொல்கிறார் என்பதில் யாரும் அக்கறை செலுத்துவதில்லை. சிலசமயங்களில் முன்னாள் வீரர், தற்போது விளையாடும் வீரர்கள் குறித்து மோசமாகக் கருத்து கூறிவிடுவார்கள். உங்களுக்கான வெறுப்பாளர்கள் எப்போதும் இருப்பார்கள். இது என் தவறு அல்ல.

நான் தவறு எதுவும் செய்யவில்லை. உங்கள் நாட்டு மக்களிடமிருந்தும் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களிடமிருந்தும் ஆதரவு கிடைத்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அத்தகைய ஆதரவை அவர்கள் தராதது அவர்களுடைய பிரச்னை. இச்சமயத்தில் எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை. என்ன செய்து சாதிக்க வேண்டும் என்பது எனக்குத்  தெரியும். நூறு சதவிகம் என் உழைப்பைச் செலுத்தினால் நல்ல முடிவுகள் கிடைக்கும். என்னை இது போல நடத்துவதின் மூலம் எனக்கு அவமரியாதை ஏற்படுத்துகிறார்கள். எந்த நாட்டுக்காக நான் விளையாட வேண்டும் என்பதை நான் யோசிக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com