3-0: ரஷித் கானின் கடைசிப் பந்தில் வென்ற ஆப்கானிஸ்தான்! வங்கதேசம் பரிதாபம்!

ரஷித் கான், இன்றைய கிரிக்கெட் உலகில் தன்னிகரற்ற நட்சத்திரமாக உள்ளார்....
3-0: ரஷித் கானின் கடைசிப் பந்தில் வென்ற ஆப்கானிஸ்தான்! வங்கதேசம் பரிதாபம்!

ரஷித் கான், இன்றைய கிரிக்கெட் உலகில் தன்னிகரற்ற நட்சத்திரமாக உள்ளார். இவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ளத் தெரியாமல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் 3-0 எனத் தோல்வியடைந்துள்ளது வங்கதேசம். 

முதல் இரு டி20 ஆட்டங்களை வென்று டி20 தொடரை வென்ற ஆப்கானிஸ்தான், டெஹ்ராடூனில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஷென்வாரி 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். 

எளிதான இலக்கை எதிர்கொண்ட வங்கதேச அணி, 9-வது ஓவரில் 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த முஷ்ஃபிகுர் ரஹிமும் மஹ்முதுல்லாவும் நிதானமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள்.

கடைசி 5 ஓவர்களில் மூன்று ஓவர்களை ரஷித் கானுக்கு ஒதுக்கினார் கேப்டன் அஸ்கார். இதுதான் வங்கதேச அணிக்குச் சிக்கலாகிப் போனது. கடைசி 5 ஓவர்களில் வங்கதேச அணி வெற்றி பெற 55 ரன்கள் தேவைப்பட்டன. ரஷித் கானின் ஓவர்களைக் கவனமாக விளையாடி, ரன்கள் எடுப்பதற்குப் பதிலாக விக்கெட்டுகள் விழாமல் இருவரும் பார்த்துக்கொண்டார்கள். இதனால் மற்ற இரு ஓவர்களைக்   குறிவைத்தார்கள். அஃப்தப் அலாம் வீசிய 17-வது ஓவரில் 15 ரன்களும் கரின் ஜனத் வீசிய 19-வது ஓவரில் 21 ரன்களும் எடுத்தார்கள். முக்கியமாக 19-வது ஓவரில் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை அடித்தார்  ரஹிம். தனது 2-வது மற்றும் 3-வது ஓவர்களில் 10 ரன்கள் மட்டும் கொடுத்த ரஷித் கான், கடைசி ஓவரை வீசவந்தபோது வங்கதேச அணி வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்டன.

ஆனால் முதல் பந்திலேயே முஷ்ஃபிகுர் ரஹிம் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரஷித் கான் சிறப்பாகப் பந்துவீசியதால் கடைசிப் பந்தில் வங்கதேச அணிக்கு நான்கு ரன்கள் தேவைப்பட்டன. கடைசிப் பந்தை எதிர்கொண்ட அரிஃபுல் சிக்ஸ் அடிக்க முயலும்போது அற்புதமாக அதைத் தடுத்த ஷஃபிகுல்லா, அதை பவுண்டரிக்கும் போகாமல் பார்த்துக்கொண்டார். பிறகு குறி பார்த்து த்ரோ வீசியதால் மஹ்முதுல்லா மூன்றாவது ரன் எடுக்க முயலும்போது ரன் அவுட் ஆனார். இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியை அடைந்தது ஆப்கானிஸ்தான்.

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என்கிற கணக்கில் வென்றுள்ளது ஆப்கானிஸ்தான். ஆட்ட நாயகன் விருது முஷ்ஃபிகுருக்கும் தொடர் நாயகன் விருது ரஷித் கானுக்கும் வழங்கப்பட்டன. 

அடுத்ததாக இந்தியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடவுள்ளது ஆப்கானிஸ்தான். பெங்களூரில் ஜூன் 14 அன்று தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com