செஸ் சாதனை: இந்திய அளவில் தமிழ்நாட்டின் பெருமையை மேலும் உயர்த்திய 12 வயது பிரக்ஞானந்தா!

இந்தியாவில் இதுவரை 52 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளார்கள். அவர்களில்... 
செஸ் சாதனை: இந்திய அளவில் தமிழ்நாட்டின் பெருமையை மேலும் உயர்த்திய 12 வயது பிரக்ஞானந்தா!

உலகளவில் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர்.

இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்.

12 வயது 10 மாதங்களில் இந்த இரு பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா.

2002-ல், உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின், 12 வயதில் (12 வருடம் 7 மாதங்களில்) செஸ் கிராண்ட் மாஸ்டராகி, இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையைச் செய்தார். இன்றுவரை அவர் சாதனையை யாராலும் தாண்ட முடியவில்லை. எனினும் இதற்கு முன்பு, இந்தியாவின் நெகி, 13 வருடம், 4 மாதம் 22 நாள்களில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அவருடைய சாதனையைத் தகர்த்து, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா. நடப்பு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், 13 வருடம், 4 மாதம் 27 நாள்களில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். 

பிரக்ஞானந்தா, 10 வயதில் (10 வருடம் 9 மாதங்களில்) சர்வதேச மாஸ்டராகி சாதனை செய்தார். 2005-ம் வருடம் ஆகஸ்ட் 10-ம் தேதி பிறந்த பிரக்ஞானந்தா, கடந்த செப்டம்பர் மாதம், இத்தாலியின் டிரவிசியோவில் நடைபெற்ற U-20 அளவிலான உலக ஜூனியர் செஸ் போட்டியிலேயே கிராண்ட் மாஸ்டராகி சாதனை படைக்க ஒரு வாய்ப்பு உருவானது. மூன்று கிராண்ட் மாஸ்டர்களைத் தோற்கடித்த பின்னரும் கடைசி இரு ஆட்டங்களில் வெல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் அதை அவரால் சாதிக்கமுடியவில்லை. இல்லாவிட்டால் அப்போதே அவர் கிராண்ட் மாஸ்டராகி, உலக சாதனை படைத்திருப்பார். எனினும் அதிகக் காலம் பிடிக்கவில்லை. தற்போது கிராண்ட் மாஸ்டராகி இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித் தந்துள்ளார். இவருடைய பயிற்சியாளர் ரமேஷுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

இந்தியாவில் இதுவரை 52 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளார்கள். அவர்களில் 18 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்திய அளவில் தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளார்கள். அடுத்த இடத்தில் மேற்கு வங்கத்தில் 8, மஹாராஷ்ராவில் 7 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளார்கள். பிரக்ஞானந்தா கிராண்ட் மாஸ்டர் ஆனதன் மூலம், இந்திய செஸ் வரைபடத்தில் தமிழ்நாட்டின் பலம் மேலும் அதிகமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com