
சென்னை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் மிட்செல் சாண்ட்னரை இந்த வருடை ஐபிஎல்-லில் காணமுடியாது. எனில், அவருக்குப் பதிலாக எந்த வீரரை சிஎஸ்கே தேர்வு செய்யப்போகிறது?
26 வயது சாண்ட்னரை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 50 லட்சத்துக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 45*, 63*, 41, 67 என ரன்கள் குவித்தார் சாண்ட்னர். இதனால் அவருடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சுத் திறமைகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குப் பெரிய பலத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் காயத்தால் தற்போது அவரால் ஐபிஎல் போட்டியிலேயே விளையாடமுடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாண்ட்னருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. காயம் தீவிரமாக உள்ளதால் தற்போது அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் காயத்துக்கு 9 மாதங்கள் சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஐபிஎல், கவுண்டி ஆட்டங்கள் போன்ற முக்கியமான போட்டிகளில் சாண்ட்னரால் பங்கேற்கமுடியாது.
எனினும் தற்போது சாண்ட்னருக்குப் பதிலாக மற்றொரு வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்படும். ஆனாலும் அதில் சில விதிமுறைகள் உள்ளன.
சாண்ட்னருக்கு சிஎஸ்கே எவ்வளவு வழங்குவதாக இருந்ததோ அதே தொகையில் அல்லது அதற்குக் குறைவான தொகைக்குத்தான் வீரரைத் தேர்வு செய்யவேண்டும். ஐபிஎல் ஏலப் பட்டியலில் இடம்பிடித்த வீரர்களில் இருந்துதான் அவர் தேர்வாக வேண்டும். அவ்வீரரின் அடிப்படை விலை ரூ. 50 லட்சம் அல்லது அதற்கும் குறைவானதாக இருக்கவேண்டும் என்கிற நெருக்கடிகள் சிஎஸ்கேவுக்கு உள்ளன.
இன்னொரு ஆல்ரவுண்டர்தான் வேண்டுமென்றால் ஆஸ்திரேலியாவின் ஆஸ்டன் அகரை சிஎஸ்கே தேர்வு செய்யலாம். மேற்கிந்தியத் தீவுகள் தொடக்க வீரர் டுவைன் ஸ்மித்தும் ஒரு நல்ல தேர்வாக அமைவார். மே.இ. ஆல்ரவுண்டர் ரோவ்மேன் பவலையும் சிஎஸ்கே பரிசீலிக்க வாய்ப்புண்டு.
பிரக்யான் ஓஜா, இக்பால் அப்துல்லா, சாய் கிஷோர் போன்ற இடக்கை பந்துவீச்சாளர்களையும் தேர்வு செய்யலாம். ஆனால் அணியில் ஏற்கெனவே ஜடேஜா இருப்பதால் இன்னொரு இடக்கை பந்துவீச்சாளரை சிஎஸ்கே தேர்வு செய்யவேண்டிய அவசியம் இருக்காது.
வருண் ஆரோன், ஜை ரிச்சர்ட்சன், மார்க்ரம், ஷம்ஸி என ரூ. 50 லட்சத்துக்குள் தேர்வு செய்யக்கூடிய வீரர்கள் பலர் உள்ளார்கள். சென்னை அணியின் தேவைக்கேற்ப தகுந்த வீரர் விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளார்.
சாண்டனரின் நிலைமையை அறிந்துள்ளோம். கேப்டனும் பயிற்சியாளரும் இணைந்து எந்த வீரரைத் தேர்வு செய்யவேண்டும் என முடிவெடுப்பார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.