

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோதா குழுவை நியமித்தது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொண்ட லோதா குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதன் காரணமாக அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அணிகளைச் சேர்ந்த வீரர்கள், புதிதாக போட்டியில் சேர்க்கப்பட்ட ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளில் விளையாடினார்கள்.
இந்நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் இந்த சீசன் முதல் மீண்டும் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஏப்ரல் 7-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் மும்பையை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் சிஎஸ்கே அணி மீண்டும் ஐபிஎல்-லில் விளையாடுவது குறித்து புதிய காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. டியர் சிஎஸ்கே என்கிற பெயரில் வெளியான இந்தக் காணொளி, ஒரு பெண்ணின் பார்வையில் சிஎஸ்கே-வை வழிபடுவதாக அமைந்துள்ளது. ஓவியங்கள், அனிமேஷன் போன்றவற்றின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் காணொளி, சிஎஸ்கேவுக்கு வரவேற்பு தெரிவிப்பதோடு சமூகவாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளையும் கூடவே வெளிப்படுத்தியுள்ளது. மிகவும் உணர்வுபூர்வாக அமைந்துள்ள இந்தக் காணொளிக்குச் சமூகவலைத்தளத்தில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் கூட இந்தக் காணொளியைப் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் யூடியூப் தளத்தில் இந்தக் காணொளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தக் குறும்படத்தை இயக்கியவர், ரெளனக் மன்கொட்டில். ஓவியங்கள், அனிமேஷன் - நஜீப் தொட்டுங்கல். குரல் - காவ்யா நட்சத்திரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.