
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்துக்குப் பதிலாக மேட் ரென்ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.
கடந்த 1-ம் தேதி தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்த முயன்றது விடியோவில் பதிவாகியது. இது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் உதவியுடன் செய்யப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஸ்மித்தும், பேன்கிராஃப்டும் ஒப்புக் கொண்டுள்ளனர். அத்துடன், அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித்தும், துணை கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னரும் விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.
ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் உள்பட அந்நாட்டில் பல்வேறு தரப்புகளிலிருந்து இவர்களின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. அந்நாட்டிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளும் அவர்களை கடுமையாக சாடி முதல் பக்கத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளன. சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
21 வயது ரென்ஷா, இதுவரை 10 டெஸ்டுகள் விளையாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.