ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லேமன் ராஜிநாமா?: கிரிக்கெட் ஆஸ்திரேலியா பதில்!
நடந்த சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லேமன் பதவியிலிருந்து விலகவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன...


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.
கடந்த 1-ம் தேதி தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்த முயன்றது விடியோவில் பதிவாகியது. இது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் உதவியுடன் செய்யப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஸ்மித்தும், பேன்கிராஃப்டும் ஒப்புக் கொண்டுள்ளனர். அத்துடன், அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித்தும், துணை கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னரும் விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.
ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் உள்பட அந்நாட்டில் பல்வேறு தரப்புகளிலிருந்து இவர்களின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. அந்நாட்டிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளும் அவர்களை கடுமையாக சாடி முதல் பக்கத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளன. சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடந்த சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லேமன் பதவியிலிருந்து விலகவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் ஸ்மித், வார்னர் ஆகிய இருவருக்கும் ஓர் ஆண்டு தடை விதிக்கவும் கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகம் முடிவெடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் 48 வயது லேமன் ராஜிநாமா குறித்த செய்திகளை கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகம் மறுத்துள்ளது. இதுபற்றி ஒரு பேட்டியில் கூறியதாவது: இதுபோன்ற தகவல்களை மறுக்கிறோம். விசாரணையின் முடிவில்தான் எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
2013 ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக லேமன் நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் 2019 வரை உள்ளது. 2019-ம் ஆண்டுடன் முடிவுக்கு வரும் ஆஸ்திரேலிய அணியுடனான ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளப்போவதில்லை என்று அவர் முன்பே பேட்டியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...