டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சதமடித்து அசத்திய கெளர்: சாதனை விவரங்கள்!

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சதமடித்து அசத்திய கெளர்: சாதனை விவரங்கள்!

இதற்கு முன்பு மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் எடுத்த 97 ரன்களே டி20 ஆட்டத்தில் இந்திய வீராங்கனை எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது... 

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி மே.இ.தீவுகளில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. கயானாவின் பிராவிடென்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும்-நியூஸிலாந்தும் மோதின. நடப்பு சாம்பியன் மே.இ.தீவுகள், மூன்று முறை சாம்பியன் ஆஸ்திரேலியா உள்பட உலகின் முன்னணி அணிகள் இடம் பெற்றுள்ள இப்போட்டியில் இளம்வீராங்கனைகளை கொண்ட இந்தியாவும் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் நோக்கில் களமிறங்கியுள்ளது.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இந்தியா 194 ரன்களை குவித்தது. இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 8 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 51 பந்துகளில் 103 ரன்களை அதிரடியாக குவித்தார். டி20 ஆட்டத்தில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பெற்றார்.ஆனால் நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 160 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் தயாளன் ஹேமலதா, பூனம் யாதவ் ஆகியோர் அபாரமாக பந்துவீசி தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர். இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

* இதற்கு முன்பு மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் எடுத்த 97 ரன்களே டி20 ஆட்டத்தில் இந்திய வீராங்கனை எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. அதை கெளர் முறியடித்துள்ளார். தற்போது அவர் எடுத்துள்ள 103 ரன்களே டி20 ஆட்டத்தில் ஓர் இந்திய வீராங்கனை எடுத்துள்ள அதிகபட்ச ரன். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் கெளர், 77 ரன்கள் எடுத்தது இந்திய வீராங்கனைகளில் அதிகபட்சமாக இருந்தது. அதையும் கெளர் முறியடித்துள்ளார். 

* நேற்று 8  சிக்ஸர் அடித்தார் கெளர். மே.இ. அணியின் டோட்டின் 9 சிக்ஸர் அடித்ததே அதிக சிக்ஸர் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. நியூஸிலாந்தின் டெவின் 8 சிக்ஸ் அடித்து 2-ம் இடத்தில் உள்ளார். தற்போது கெளரும் 2-ம் இடம் பிடித்துள்ளார். 

* டி20 ஆட்டத்தில் அதிக சிக்ஸர் அடித்த இந்தியர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார் கெளர். இதற்கு முன்பும் அவர் முதலிடத்தில் இருந்தார். இலங்கைக்கு எதிராக செப்டம்பரில் 5 சிக்ஸர் அடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com