எங்கள் காதல் குறித்து வீட்டில் சொல்ல வேண்டிய அவசியம் வரவில்லை! சாய்னா நேவால் பேட்டி!

எங்கள் காதல் குறித்து வீட்டில் சொல்ல வேண்டிய அவசியம் வரவில்லை! சாய்னா நேவால் பேட்டி!

இறகுப் பந்தாட்டத்தில் நட்சத்திர  ஆட்டக்காரரான  சாய்னா நேவால்   தனது காதலை பத்தாண்டு காலம் மட்டுமே ரகசியமாக வைக்க  முடிந்தது.
Published on

இறகுப் பந்தாட்டத்தில் நட்சத்திர ஆட்டக்காரரான சாய்னா நேவால் தனது காதலை பத்தாண்டு காலம் மட்டுமே ரகசியமாக வைக்க முடிந்தது. சக ஆட்டக்காரர்  பாருப்பள்ளி கஷ்யப் என்பவரை  வரும் டிசம்பர் 16 -இல் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். நெருங்கிய சொந்த பந்தங்கள் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்றும்   வரவேற்பு தடபுடலாக  டிசம்பர் 21-இல் நடைபெறும் என்றும்  தெரிய வந்துள்ளது.

கஷ்யப் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் சாய்னாவின் படங்களை பதிவேற்றம் செய்யும் போதெல்லாம் 'ஓ.. காதல் பறவைகள்' என்று ரசிகர்களிடம் கமெண்ட்டுகள் பதிவானாலும், கஷ்யப் - சாய்னா காதலை வெளிப்படையாக மறுக்கவோ ஒத்துக் கொள்ளவோ இல்லை. சாய்னாவிற்கு  வயது இருபத்தெட்டு ஆகிறது. 'இதுதான் சரியான தருணம்.. இனியும் தள்ளிப் போட வேண்டாம்' என்று இரு வீட்டாரும் கலந்து பேசி  டிசம்பர் 16 - ஐ திருமண நாளாக குறித்துள்ளனர்.

'எனக்கு அடுத்தடுத்து போட்டிகள் உள்ளன. அதனால் இந்த தேதியை விட்டால் வேறு தேதி கிடைப்பது சிரமம். அதனால்  டிசம்பர் 16-இல் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தோம். 2007-இல் இருந்து கஷ்யப்பை எனக்குத் தெரியும். போட்டிகள் நிமித்தம் ஒன்றாக பயணம் செய்திருக்கிறோம். ஒன்றாக விளையாடியும் உள்ளோம். இறகுப் பந்தாட்டம் பற்றி விலாவாரியாகப் பேசுவோம். அலசுவோம். அதன் காரணமாக  பரஸ்பரம் கவரப்பட்டோம். ஆனால் திருமணம் பற்றி ஆலோசிக்கவில்லை. எங்களின் கவனம் விளையாட்டில் லயித்திருந்தது. போட்டிகளில் வெற்றி  எங்கள் லட்சியமாக  இருந்தது. அதனால் திருமணம் பற்றிய தீர்மானம் எடுக்க முடியவில்லை. இப்போது வீட்டில்  எனக்கு வேண்டியதெல்லாம்  எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும்.  

திருமணமானதும்  அந்த நிலைமை தொடரும் என்று சொல்ல முடியாது.  எனது காரியங்களை நானே செய்ய வேண்டி வரும். அப்படி செய்ய முடியும் என்ற தைரியம் எனக்கு வந்திருப்பதால் திருமணம் பற்றி முடிவெடுத்தேன். 

எங்கள் காதல் குறித்து வீட்டில் சொல்ல வேண்டிய அவசியம் வரவில்லை. எங்களின் அருகாமையைப் பார்த்து வீட்டில் புரிந்து கொண்டார்கள். எனது பெற்றோர் போட்டிகளின் போது என்னுடன் வருவார்கள். அப்போது கஷ்யப்புடன் நான் பழகுவதை பார்த்திருக்கிறார்கள்' என்கிறார் சாய்னா.

கஷ்யப் ஆந்திராவைச் சேர்ந்தவர். சாய்னா ஹரியானாவைச் சேர்ந்தவர். ஆனால் கிட்டத்தட்ட ஹைதராபாத்வாசியாகி விட்டார். பிளஸ் டூ தொடங்கி இறகுப் பந்தாட்டத்தில் பயிற்சி உட்பட எல்லா முக்கிய நிகழ்வுகளும் ஹைதராபாத்திலேயே நிகழ்ந்துள்ளன. கஷ்யப் - சாய்னா பயிற்சியாளர் கோபிசந்த்தின் அகாடமியில் பயிற்சி பெறுகிறவர்கள். 2015-இல் இறகுப் பந்தாட்டத்தில்  உலகின்  நம்பர் ஒன்  ஆட்டக்காரராக  சாய்னா உயர்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com