பூம்ரா அபார பந்துவீச்சு: இந்திய அணிக்கு 284 ரன்கள் இலக்கு!

பூம்ரா அபார பந்துவீச்சு: இந்திய அணிக்கு 284 ரன்கள் இலக்கு!

3-வது ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்துள்ளது.

புணேவில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த ஆட்டம் டையில் முடிந்தது.

இன்று தேர்வான இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், பூம்ரா இடம்பெற்றுள்ளார்கள். உமேஷ் யாதவ், ஜடேஜா இடம்பெறவில்லை. கலீல் அகமத்துக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மே.இ. அணியில் பிஷுக்குப் பதிலாக ஃபேபியன் அலன் தேர்வாகியுள்ளார். இது அவருடைய முதல் ஒருநாள் ஆட்டமாகும்.

புவனேஸ்வர் குமாரும் பூம்ராவும் ஆரம்பம் முதல் சிறப்பாகப் பந்துவீசி மே.இ. அணி அதிக ரன்கள் குவிக்காமல் பார்த்துக்கொண்டார்கள். ஆறாவது ஓவரில் ஹேம்ராஜ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பவல் 21 ரன்களில் வெளியேறினார். இருவரையும் அற்புதமான பந்துவீச்சால் வெளியேற்றினார் பூம்ரா. சாமுவேல்ஸ் இன்றும் சரியாக விளையாடாமல் 9 ரன்களில் கலீல் அஹமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஷேய் ஹோப் - ஹெட்மயர் ஜோடி மீண்டும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. ஆனால் கடந்தமுறை போல நீண்ட நேரம் இவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போனது. 21 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார் ஹெட்மயர். இதன்பிறகு ஹோப்புடன் இணைந்து இந்தமுறையும் நன்கு ஆடினார் கேப்டன் ஹோல்டர். எனினும் அவர் புவனேஸ்வர் பந்துவீச்சில் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது பூம்ராவின் அற்புதமான பந்தினால் ஹோப் போல்ட் ஆனார். இதனால் அவரால் இந்தமுறை சதமடிக்க முடியாமல் போனது. 44-வது ஓவரில் அவர் வெளியேறியபோது மே.இ. அணி 227  ரன்கள் எடுத்திருந்தது. இதனால் அந்த அணி 275 ரன்கள் எடுக்க மிகவும் சிரமப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 9-வது விக்கெட்டுக்கு 35 பந்துகளில் 50 ரன்கள் கூட்டணி அமைத்து மே.இ. அணி நல்ல ஸ்கோர் எடுக்க உதவினார்கள் நர்ஸும் ரோச்சும். நர்ஸ், 22 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். கடைசியில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது மே.இ. அணி. 10 ஓவர்கள் வீசி 35 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் பூம்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com