நாளைய போட்டியில் புதிய மைல்கல்லை எட்டுவாரா தோனி?

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் 5-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக 10,000 ரன்களை கடக்கும் 5-வது வீரர் என்ற மைல்கல்லை தோனி எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாளைய போட்டியில் புதிய மைல்கல்லை எட்டுவாரா தோனி?
Published on
Updated on
1 min read

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் 5-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக 10,000 ரன்களை கடக்கும் 5-வது வீரர் என்ற மைல்கல்லை தோனி எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறுகிறது. முதல் 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம், நாளைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்திய அணியும், தொடரை சமன் செய்ய மேற்கிந்திய தீவுகள் அணியும் காத்திருக்கின்றன. 

பேட்டிங்:

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் அம்பதி ராயுடு நல்ல நிலையில் உள்ளனர். ரோஹித் சர்மா 2 சதம், கோலி 3 சதம், ராயுடு 1 சதம், 1 அரைசதம் என நம்பிக்கை அளிக்கின்றனர். அதேசமயம் தவான் நல்ல தொடக்கத்தை தந்தாலும், அதனை மிகப் பெரிய ரன்களாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 

கடந்த சில போட்டிகளில் சற்று திணறி வரும் தோனி, நாளைய போட்டியில் ரன் குவிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளாகியுள்ளார். 

ஜாதவ் பினிஷிங்க் மட்டுமின்றி பந்துவீச்சிலும் சற்று கைகொடுப்பார் என்பதால் நாளைய போட்டியில் அவரே மீண்டும் பந்த்-க்கு பதில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தோனி 10,000?

தோனி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 331 போட்டிகளில் விளையாடி 10,173 ரன்கள் குவித்துள்ளார். இதில், ஆசிய அணிக்காக அவர் எடுத்த 174 ரன்களும் அடங்கும். இதன்மூலம், அவர் இந்திய அணிக்காக மட்டும் தற்போது 9,999 ரன்களில் உள்ளார். நாளைய போட்டியில் அவர் 1 ரன் எடுக்கும் பட்சத்தில்  ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 10,000 ரன்களை கடக்கும் 5-ஆவது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.  

பந்துவீச்சு:

பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா, புவனேஷ்வரின் வருகை இந்திய அணிக்கு சற்று வலு சேர்த்துள்ளது. கடந்த போட்டியில் அசத்திய கலீல் அகமது நாளைய போட்டியிலும் விளையாடும் லெவனில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சுழற்பந்துவீச்சை பொறுத்தவரை, கடந்த போட்டியில் ஜடேஜாவுக்காக ஓய்வளிக்கப்பட்ட சாஹல் நாளை மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் குல்தீப்பும் அணியில் தொடர்ந்து நீடிப்பார் என்று தெரிகிறது. 

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு முந்தைய தினம் 12 பேர் அடங்கிய வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால், அதன் பிறகு அந்த நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை.    

திருவனந்தபுரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதால் இந்தப் போட்டியில் மழை குறுக்கீடு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com