யு.எஸ். ஓபன்: விதிமுறைகளை மீறிய செரீனா வில்லியம்ஸுக்கு அபராதம்!

யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் விளையாடியதற்காக செரீனாவுக்கு ரூ. 13.40 கோடி பரிசுத்தொகையாகக் (1.85 மில்லியன் டாலர்) கிடைக்கும். இதிலிருந்து... 
யு.எஸ். ஓபன்: விதிமுறைகளை மீறிய செரீனா வில்லியம்ஸுக்கு அபராதம்!

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் நவோமி ஒஸாகா. இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்றது. மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்களில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஜப்பானின் ஒஸாகா ஆகியோர் வென்று இறுதிக்கு முன்னேறினர். இறுதி ஆட்டம் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இதில் 20 வயதான ஒஸாகா 6-2, 6-4 என நேர் செட்களில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செரீனாவை எளிதாக வீழ்த்தினார்.

இரண்டாவது செட் நடைபெற்ற போது, செரீனாவின் தனது பயிற்சியாளரிடம் இருந்து ஆட்ட உத்திகளை பெற்றார். இதற்கு ஆட்ட நடுவர் கார்லோஸ் ராமோஸ் எச்சரிக்கை விடுத்தார். இதனால் கொதிப்புற்ற செரீனா டென்னிஸ் மட்டையை வீசி எதிர்ப்பை பதிவு செய்ததால், இரண்டாவது விதிமீறல் எனக்கூறி எதிர் தரப்பு வீராங்கனை ஒஸாகாவுக்கு ஒரு புள்ளி முன்னிலை அளித்தார். இதனால் மேலும் கொதிப்புற்ற செரீனா, நடுவரை நோக்கி திருடன் எனக்கூச்சலிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என வாக்குவாதம் செய்தார். எனது குணநலனை கொச்சைப்படுத்துகிறீர்கள், நீங்கள் ஒரு பொய்யர் என செரீனா கூறியதால், மூன்றாவது விதிமீறல் எனக்கூறி மேலும் ஒரு புள்ளியை ஒஸாகாவுக்கு நடுவர் கார்லோஸ் அளித்தார். இதனால் இரண்டாவது செட்டில் 5-3 என ஒஸாகா முன்னிலை பெற்றார். எனினும் செரீனா அடுத்த ஆட்டத்தை வென்றார். ஆனால் அதையும் மீறி ஜப்பான் வீராங்கனை ஒஸாகா 6-4 என இரண்டாவது செட்டை கைப்பற்றி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்நிலையில் இறுதிச்சுற்றில் விதிமுறைகளை மீறியதற்காக செரீனாவுக்கு ரூ. 12.31 லட்சம் (17,000 டாலர்) அபராதம் விதித்துள்ளது யு.எஸ். ஓபன் டென்னிஸ் நிர்வாகம். யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் விளையாடியதற்காக செரீனாவுக்கு ரூ. 13.40 கோடி பரிசுத்தொகையாகக் (1.85 மில்லியன் டாலர்) கிடைக்கும். இதிலிருந்து அபராதத் தொகை கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை செரீனாவுக்கு வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com