இலங்கையுடனான ஒருநாள் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி

இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியுள்ளது. 

இலங்கை, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றது. 

இதையடுத்து, இரு அணிகளுக்கிடையிலான 2-ஆவது ஒருநாள் போட்டி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தானியா பாட்டியா 68 ரன்களும், கேப்டன் மிதாலி ராஜ் 52 ரன்களும் எடுத்தனர். 

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், அந்த அணி 48.1 ஓவரின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் மான்ஷி ஜோஷி, ராஜேஸ்வரி காயக்வாட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.   

இதன்மூலம், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இரு அணிகளுக்கிடையிலான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com