அணிக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை; ஓய்வு பெறத் தயார்: பரபரப்பை ஏற்படுத்தும் இலங்கை வீரர் மேத்யூஸின் கடிதம்!

இலங்கை அணியின் தோல்விகளுக்கு நான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன் எனக் கருதுகிறேன்...
அணிக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை; ஓய்வு பெறத் தயார்: பரபரப்பை ஏற்படுத்தும் இலங்கை வீரர் மேத்யூஸின் கடிதம்!

தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைப் போட்டியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோற்ற இலங்கை அணி, முதல் சுற்றிலேயே போட்டியை விட்டு வெளியேறியது. இதையடுத்து கேப்டன் பொறுப்பிலிருந்து மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் கேப்டன் சன்டிமல், இலங்கை ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

கேப்டன் பொறுப்பிலிருந்து விடுபடுமாறு மேத்யூஸுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்து வருகிற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சன்டிமல் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று இலங்கை கிரிக்கெட் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வாவுக்கு மேத்யூஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

ஆசியக் கோப்பையில் இலங்கை அணியின் தோல்விகளுக்கு நான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன் எனக் கருதுகிறேன். தோல்விகளுக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். ஆனால் எல்லாப் பழிகளும் என் மீதே விழுந்துள்ளது. எல்லா முடிவுகளும் தேர்வுக்குழுவினரும் தலைமைப் பயிற்சியாளருடன் இணைந்தே எடுக்கப்பட்டது.

நான் பதவி விலகவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதால் நான் கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளேன். சமீபத்தில் கேப்டன் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டபோது என் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் பயிற்சியாளர் மீதுள்ள நம்பிக்கையினால் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். 

ஆசியக் கோப்பை தோல்விக்குப் பிறகு உலகக் கோப்பைப் போட்டிக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கேப்டன் பதவியிலிருந்து விலகும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், தேர்வுக்குழுவினரும் பயிற்சியாளரும் ஒருநாள், டி20 ஆட்டங்களில் பங்கேற்க எனக்குத் தகுதியில்லை என எண்ணினால், அதன்மூலம் அணியில் எனக்கு இடம் இல்லை என எண்ணினால், ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறத் தயாராக உள்ளேன். அணிக்குச் சுமையாக இருக்க எப்போதும் நான் விரும்பியதில்லை என்று கடிதம் எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com