வீரர்களை விடவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு அதிக பரிசுத்தொகையா?: பிசிசிஐ முடிவால் புதிய சர்ச்சை!

வழக்கமாக பயிற்சியாளரைக் காட்டிலும், களத்தில் ஆடிய வீரர்களுக்கே அதிக பரிசுத்தொகை அறிவிக்கப்படும். ஆனால், இம்முறை...
வீரர்களை விடவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு அதிக பரிசுத்தொகையா?: பிசிசிஐ முடிவால் புதிய சர்ச்சை!

சமீபத்தில் நிறைவடைந்த யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. மேலும், 4 முறை சாம்பியன் ஆன ஒரே அணி என்ற பெருமையும் பெற்றது.

யு-19 உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ள இந்திய அணிக்கு, பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இதில், பயிற்சியாளர் ராகுல் திராவிட் ரூ.50 லட்சமும், அணி வீரர்கள் தலா ரூ.30 லட்சமும் ரொக்கப் பரிசு பெறுகின்றனர். பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, ஃபீல்டிங் பயிற்சியாளர் அபய் சர்மா உள்ளிட்ட அணியின் உதவிப் பணியாளர்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக பயிற்சியாளரைக் காட்டிலும், களத்தில் ஆடிய வீரர்களுக்கே அதிக பரிசுத்தொகை அறிவிக்கப்படும். ஆனால், இம்முறை பயிற்சியாளருக்கு அதிகமாக பரிசுத் தொகை வழங்க பிசிசிஐ நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. பாரம்பரிய "குரு-சிஷ்யன்' முறைப்படி பயிற்சியாளருக்கு அதிகமாக பரிசுத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பிசிசிஐயின் இந்த அறிவிப்பு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்புவரை வீரர்களுக்கே அதிக பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பயிற்சியாளர்கள் எப்போதும் வீரர்களை விடவும் குறைவான பரிசுத்தொகையையே பெறுவார்கள். 

2011 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது பிசிசிஐயின் பரிசுத்தொகையாக தோனி, சச்சின் உள்ளிட அணி வீரர்களுக்குத் தலா ரூ. 2 கோடியும் (முதலில் ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்டது) கேரி கிறிஸ்டன் உள்ளிட்ட பயிற்சியாளர்களுக்குத் தலா ரூ. 50 லட்சமும் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்குத் தலா ரூ. 25 லட்சமும் வழங்கப்பட்டன. 2012-ல் யு-19 உலகக் கோப்பையை உன்முக்த் சந்த் தலைமையிலான இந்திய அணி வென்றபோது அணி வீரர்களுக்குத் தலா ரூ. 20 லட்சமும் பயிற்சியாளர் உள்ளிட்ட உதவிப் பணியாளர்களுக்குத் தலா ரூ. 15 லட்சமும் வழங்கப்பட்டன. 

இந்நிலையில் இந்தமுறை வழக்கத்துக்கு மாறாக வீரர்களை விடவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு அதிக பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. உலகக் கோப்பை வெற்றிக்கு வீரர்கள் முதன்மையான காரணமில்லையா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் ராகுல் டிராவிட் நட்சத்திர வீரர் என்பதால் அவருக்கு மட்டும் கூடுதல் சலுகை அளிக்கப்பட்டுள்ளதா என்கிற விமரிசனம் எழுந்துள்ளது.

பிசிசிஐயின் செயலர் சி.கே. கண்ணா இதுகுறித்து ஒரு பேட்டியில் கூறியதாவது: இது நிர்வாகிகளின் கமிட்டி (சிஓஏ) முடிவு செய்தது. என்னால் இதுகுறித்து கருத்து சொல்லமுடியாது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com