எனக்குத் தமிழ்நாட்டில் வேலை கிடைக்குமா?: தங்க மங்கை கோமதி மாரிமுத்துவின் கோரிக்கை!

எனக்குத் தமிழ்நாட்டில் வேலை வாங்கவேண்டும் என்று ரொம்ப ஆசை. ஆனால் எனக்கு இங்கு வேலை கிடைக்கவில்லை...
எனக்குத் தமிழ்நாட்டில் வேலை கிடைக்குமா?: தங்க மங்கை கோமதி மாரிமுத்துவின் கோரிக்கை!

டோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் திருச்சி அருகேயுள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி (30), தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ராசாத்தி தம்பதியின் மகள் கோமதி. மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணி, அடிப்படை வசதிகளில்லாத கிராமம், பள்ளிப் படிப்புக்கு கூட 15 கி.மீ. தொலைவு நடந்தே செல்லும் நிலை இருந்தது அவருக்குள் தடகளப் போட்டிக்கான உத்வேகத்தை அளித்தது. கடுமையான பயிற்சிகள் மூலம் தடகள வீராங்கனை ஆனார்.

2013-ல் புணேவில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட கோமதி, 7-ம் இடம் பிடித்தார். இதுவே அவருடைய அறிமுக சர்வதேசப் போட்டி. பிறகு, பெங்களூரில் வருமான வரித் துறையில் அவருக்கு வேலை கிடைத்தது. 2015-ல் சீனாவில் நடைபெற்ற போட்டியில் 4-ம் இடம் பிடித்தார். அடுத்த வருடம் புற்றுநோய் காரணமாக கோமதியின் தந்தை இறந்தார். அதன்பிறகு சில மாதங்களில் கோமதியின் பயிற்சியாளர் காந்தியும் இறந்து போக, அந்தக் கடினமான காலக்கட்டத்தை எப்படியோ கடந்து வந்துள்ளார். 2016-ல் காயம் ஏற்பட்டதால் அடுத்த இரு வருடங்கள் கோமதியால் எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ள முடியாமல் போனது.  எனினும் மீண்டும் ஓடவேண்டும், ஜெயிக்கவேண்டும் என்கிற வைராக்கியமே கோமதியை இன்று தங்க மங்கையாக உயர்த்தியுள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கோமதி மாரிமுத்து கூறியதாவது:

நான் இன்னும் திருச்சி வீட்டுக்குச் செல்லவில்லை. ஆனால் முதல்வர் அவர்கள் என் வீட்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்கள். அம்மா சொன்னார்கள். அவருக்குப் படிக்கத் தெரியாது என்பதால் நான் தான் வீட்டுக்குச் சென்று அந்தக் கடிதம் என்னவென்று பார்க்கவேண்டும். முதல்வர், கனிமொழி, ஸ்டாலின் ஆகியோர் என்னுடைய வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். எனக்கு நிதியுதவி செய்தால் உதவியாக இருக்கும். சத்துள்ள உணவுகளை உண்ண முடியும். எனக்குச் செய்யாவிட்டாலும் என்னை விடவும் ஜீனியர் வீரர்களுக்கு செய்தால் இன்னும் சந்தோஷப்படுவேன். 

ஒரு போட்டியில் பங்குபெற வேண்டுமென்றால் தீவிரமாகப் பயிற்சி செய்யவேண்டும். அது இந்தியாவில் கிடைப்பது கடினம். கென்யா போன்ற வெளிநாடுகளில் இதர நாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்கிறார்கள். அதுபோல என்னையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி மேற்கொள்ள உதவவேண்டும். கத்தாரிலேயே ஒரு நிறுவனம் என்னிடம் எங்கு வேண்டுமானாலும் பயிற்சி எடுத்துக்கொள் என்று சொன்னார்கள். அதுபோல தமிழ்நாட்டிலும் எனக்கு உதவவேண்டும். அப்படிச் செய்தால் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வேன். 

2015-ல் சீனாவில் ஒரு போட்டியில் நான்காம் இடம் பெற்றேன். பிறகு காயமடைந்தேன். விளையாட்டில் ஈடுபடுவதை நிறுத்திக்கொண்டேன். இனி ஓடவே முடியாத என மிகவும் வருந்தினேன். சர்வதேசப் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் ஆழமாகப் பதிந்துள்ளது. அதனால் என்னால் இந்தப் போட்டியில் தங்கம் வெல்லமுடிந்தது. 

பள்ளியில் ஆரம்பக் காலங்களில் விளையாட்டு என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. அரசாங்கம், பள்ளியிலேயே மாணவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தைச் செலுத்தினால் இன்னும் சாதிப்பார்கள். 9-ம் வகுப்புக்குப் பிறகுதான் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றேன். 12-ம் வகுப்பு வரை ஷூ இல்லாமல் தான் போட்டிகளில் ஓடியுள்ளேன். பள்ளிக்குழந்தைகளுக்கு ஷூ உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினால் நான் மகிழ்ச்சியடைவேன். நான் கஷ்டப்பட்டு வந்தேன். இப்போது, அலுவலகத்தில் எனக்கு உதவி செய்கிறார்கள். அதனால் எனக்குப் பிரச்னை இல்லை. வேலையில் இல்லாதவர்களுக்கு அரசு உதவி செய்தால் இன்னும் முயற்சி செய்வார்கள். 

எனக்குத் தமிழ்நாட்டில் வேலை வாங்கவேண்டும் என்று ரொம்ப ஆசை. ஆனால் எனக்கு இங்கு வேலை கிடைக்கவில்லை. எல்லோரும் கேட்பார்கள், ஏன் நீ கர்நாடகாவுக்காக விளையாடுகிறாய் என. எனக்குத் தமிழ்நாட்டுக்காக விளையாடவேண்டும் என்றுதான் விருப்பம். நான் அங்கிருந்து சர்வதேசப் போட்டியில் பதக்கம் வாங்கியிருந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னை யார் என்றே தெரிந்திருக்காது. நான் தமிழ்நாட்டுக்காக விளையாடக்கூடாது என்று பிரச்னையெல்லாம் வந்துள்ளது. அதற்கு அனுமதியளித்ததால் தான் நான் தமிழ்நாட்டுப் பெண், தமிழ்ப் பெண் என எல்லோருக்கும் இப்போது தெரிந்துள்ளது. அதனால் எனக்குத் தமிழ்நாட்டில் வேலை கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். 

20 வயதில் தான் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தேன். 23 வயதில் எனக்கு வேலை கிடைத்தது. 2013-ல் சர்வதேசப் போட்டியில் பங்கேற்றேன். உடனடியாக வேலை கிடைத்தது. வயதாகிவிட்டது, உன்னால் வேகமாக ஓடமுடியாது என்றார்கள். பயிற்சியும் கடின உழைப்பும் இருந்தால் சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com