இந்திய அணியில் இடம் பெற நான் என்ன செய்ய வேண்டும்?: தேர்வுக்குழுவினருக்கு மனோஜ் திவாரி கேள்வி!

துலீப் கோப்பைக்கான அணிகளில் இடம்பெறாத பெங்கால் வீரர் மனோஜ் திவாரி தன் வேதனையை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்...
இந்திய அணியில் இடம் பெற நான் என்ன செய்ய வேண்டும்?: தேர்வுக்குழுவினருக்கு மனோஜ் திவாரி கேள்வி!

2019-20 இந்திய உள்ளூர் கிரிக்கெட் சீசன், துலீப் கோப்பைக்கான ஆட்டம் மூலமாக ஆகஸ்ட் 17 முதல் தொடங்கவுள்ளது. துலீப் கோப்பை ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 8 வரை பெங்களூரில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியா ப்ளூ, இந்தியா கிரீன், இந்தியா ரெட் என மூன்று அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா ப்ளூ அணிக்கு ஷுப்மன் கில்லும் இந்தியா கிரீன் அணிக்கு ஃபையஸ் ஃபஸலும் இந்தியா ரெட் அணிக்கு பிரியங் பஞ்சலும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

இந்நிலையில் துலீப் கோப்பைக்கான அணிகளில் இடம்பெறாத பெங்கால் வீரர் மனோஜ் திவாரி தன் வேதனையை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

துலீப் கோப்பைக்கான அணிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. எதிலும் என்னுடைய பெயர் இல்லை. நான் தேர்வுக்குழுவினரைக் கேட்க விரும்புவது, என்னைப் போன்ற வீரர்கள் துலீப் கோப்பைக்கான அணி மற்றும் இந்திய அணியில் இடம்பெற என்ன செய்யவேண்டும்? அதைத் தயவுகூர்ந்து என்னிடம் தெரிவித்தால், அடுத்த சீசனில் அதற்கேற்றவாறு என்னைத் தயார் செய்துகொள்வேன். சிக்கிம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து உள்ளிட்ட நான்கு அணிகளில் விளையாடிய வீரர்களின் பெயர் துலீப் கோப்பைக்கான அணிகளில் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கிறேன். தரத்தை விடவும் எண்ணிக்கைதான் முக்கியமா? அப்படியென்றால் நானும் அந்த அணிகளில் இடம்பெற்று ஏகப்பட்ட ரன்களைக் குவித்து அணியில் இடம்பெறவே விரும்புவேன். திறமையான பந்துவீச்சாளர்களைக் கொண்ட மத்திய பிரதேசத்துக்கு எதிராக இரட்டைச் சதமும் பஞ்சாப் அணிக்கு எதிராக சதமும் அடித்துள்ளேன். என்னுடைய புள்ளிவிவரங்களைத் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் எல்லோரும் அதைக் கவனியுங்கள். நான்காம் நிலை வீரராகக் கடந்த வருடம் இந்திய கிரிக்கெட்டில் யாரும் செய்யாத ஒரு சாதனையைச் செய்தேன். விஜய் ஹசாரே, தியோதர் கோப்பைப் போட்டிகளில் சராசரி 100 ரன்களை வைத்திருந்தேன். எனக்குத் தெளிவான பதில் தேவை என்று தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

 33 வயது மனோஜ் திவாரி, இந்திய அணிக்காக 12 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக 2015-ல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com