துலீப் கோப்பைக்கான அணிகளில் தமிழக வீரர் ஒருவருக்கும் இடமில்லை! காரணம் என்ன?

இதனால் தமிழக வீரர் எவரையும் தேர்வு செய்யவேண்டிய அவசியம் தேர்வுக்குழுவுக்கு ஏற்படவில்லை... 
துலீப் கோப்பைக்கான அணிகளில் தமிழக வீரர் ஒருவருக்கும் இடமில்லை! காரணம் என்ன?
Published on
Updated on
1 min read

துலீப் கோப்பைக்கான மூன்று அணிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் தமிழக வீரர் ஒருவருக்கும் இடமில்லை என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

2019-20 இந்திய உள்ளூர் கிரிக்கெட் சீசன், துலீப் கோப்பைக்கான ஆட்டம் மூலமாக ஆகஸ்ட் 17 முதல் தொடங்கவுள்ளது. துலீப் கோப்பை ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 8 வரை பெங்களூரில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியா ப்ளூ, இந்தியா கிரீன், இந்தியா ரெட் என மூன்று அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா ப்ளூ அணிக்கு ஷுப்மன் கில்லும் இந்தியா கிரீன் அணிக்கு ஃபையஸ் ஃபஸலும் இந்தியா ரெட் அணிக்கு பிரியங் பஞ்சலும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

இந்நிலையில் அறிவிக்கப்பட்ட 44 வீரர்களில் ஒருவர் கூட தமிழ்நாட்டிலிருந்து இடம்பெறவில்லை. இதனால் இந்தியத் தேர்வுக்குழுவின் திட்டத்தில் தமிழக வீரர் ஒருவர் கூட இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. கடந்த வருட ரஞ்சிப் போட்டியில் குரூப் பி அணியில் இடம்பெற்ற தமிழக அணி, 8-ம் இடத்தையே பிடித்தது. விளையாடிய 8 ஆட்டங்களில் 1 ஆட்டத்தில் மட்டும் வென்று, 2 ஆட்டங்களில் தோற்று இதர ஆட்டங்களை டிரா செய்தது. அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இந்திரஜித் 8 ஆட்டங்களில் 641 ரன்களுடன் 31-வது இடத்தையும் முகுந்த் 8 ஆட்டங்களில் 622 ரன்களுடன் 35-வது இடத்தையும் பிடித்தார்கள். அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதல் 50 வீரர்களில் ஒரு தமிழக வீரரும் இடம்பெறவில்லை. ரஞ்சி, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி ஆகிய மூன்று போட்டிகளிலும் தமிழக அணி க்ரூப் நிலையைத் தாண்டவில்லை. இதனால் தமிழக வீரர் எவரையும் தேர்வு செய்யவேண்டிய அவசியம் தேர்வுக்குழுவுக்கு ஏற்படவில்லை. 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு இது ஒரு சவால். ரஞ்சியில் தமிழக அணி மோசமாக விளையாடியதோடு, துலீப் கோப்பைக்கான அணிகளிலும் தமிழக வீரர்கள் இடம்பெறவில்லை. இந்த நிலையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எப்படி மாற்றப்போகிறது? முன்னாள் கேப்டனும் கடந்த வருடம் தேர்வுக்குழுத் தலைவராகவும் இருந்த எஸ். ஷரத் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது: மிகவும் ஏமாற்றமாக உள்ளது. 44 வீரர்களில் தமிழக வீரர் ஒருவர் கூட மூன்று அணிகளிலும் இடம்பெறக்கூடிய தகுதியை அடையவில்லை. நாம் விழித்துக்கொள்ளவேண்டும் என்று பேட்டியளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.