ஒருநாள் அணி கேப்டன் மஷ்ரஃபி மோர்டாஸாவின் மோசாமான ஆட்டம் தான் 2019 உலகக் கோப்பையில் வங்கதேச அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக அந்த அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
2019 உலகக் கோப்பையில் அனைவரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் வங்கதேச அணி அரையிறுதி வரை முன்னேறியிருக்க வாய்ப்பிருந்தது.
பல காரணங்களால் பல காரியங்கள் தடைபடும். அதுபோன்று ஒரு வீரர் சரியாக விளையாடவில்லை என்றால் அவருக்கு தனது ஆட்டம் குறித்த சிந்தனை மட்டுமே இருக்கும். அதனால் அணியின் செயல்பாடுகளில் அவருக்கு கவனம் இருக்காது. இதுபோன்ற சூழல்கள் தான் அணியின் வெளிப்பாட்டில் பிரச்னையை ஏற்படுத்துகிறது.
அவ்வகையில், கேப்டன் மஷ்ரஃபி மோர்டாஸா சரியாக விளையாடாதது ஒட்டுமொத்த அணியின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தியது. கேப்டன் சரியாக செயல்படாதபோது அங்கே வேறு மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. இதுதான் உலகக் கோப்பையில் வங்கதேச அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
தற்போதைய சூழலில் அணியை கட்டமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே எனது சிறப்பான ஆட்டத்திறன் அணிக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாக இருக்கும் என நம்புகிறேன். அணியிலுள்ள அனைத்து வீரர்களும் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்தார்.