யு-19 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு தமிழக வீரருக்கும் இடமில்லை!

எனினும் உலகக் கோப்பைக்கான யு-19 இந்திய அணியில் ஒரு தமிழக வீரரும் இடம்பெறவில்லை....
கோப்புப் படம்
கோப்புப் படம்

தென் ஆப்பிரிக்காவில் 2020 ஜனவரி - பிப்ரவரியில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியம் கர்க் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமெடுத்த மும்பையைச் சேர்ந்த 17 வயது யாஷவி ஜைஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதற்கு முன்பாக 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியா யு-19 உலக சாம்பியன் ஆகியுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 13-வது யு-19 உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்கின்றன. நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள அணிகளில் இந்திய அணி, குரூப் ஏ-வில் ஜப்பான், நியூஸிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. நான்கு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பர் லீக் சுற்றுக்குத் தகுதி பெறும். 

இந்திய கிரிக்கெட்டில் பலம் பொருந்திய அணியாக உள்ளது தமிழகம். சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டி, சையத் முஷ்டாக் அலி டி20 போட்டி ஆகிய இரண்டிலும் இறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்று 2-ம் இடம் பிடித்தது. எனினும் உலகக் கோப்பைக்கான யு-19 இந்திய அணியில் ஒரு தமிழக வீரரும் இடம்பெறவில்லை. மேலும் உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் 3 ஒருநாள் ஆட்டங்களிலும் நான்கு நாடுகள் பங்கேற்கும் 50 ஓவர் போட்டி ஒன்றிலும் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணியிலும் ஒரு தமிழக வீரரும் இடம்பெறவில்லை. 

இந்திய யு-19 அணி:

பிரியம் கர்க் (கேப்டன், உத்தர பிரதேசம்), துருவ் சந்த் ஜுரெல் (துணை கேப்டன், உத்தர பிரதேசம்), யாஷ்வி ஜைஸ்வால் (மும்பை), திலக் வர்மா (ஹைதராபாத்), திவ்யான்ஷ் சக்‌ஷேனா (மும்பை), ஷஷ்வத் ராவத் (பரோடா), திவ்யான்ஷ் ஜோஷி (மிஸோரம்), ஷுபாங் ஹெக்டே (கர்நாடகா), ரவி பிஷ்னாய் (ராஜஸ்தான்), ஆகாஷ் சிங் (ராஜஸ்தான்), கார்த்தி தியாகி (உத்தர பிரதேசம்), அதர்வா அன்கோல்கர் (மும்பை), குமார் குஷாக்ரா (ஜார்கண்ட்), ஷுஷாந்த் மிஸ்ரா (ஜார்கண்ட்), வித்யாதர் பாட்டீல் (கர்நாடகா).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com