அடிலெய்டு ஓவலில் அசத்திய வாா்னா்!

அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரா் டேவிட் வாா்னா் முச்சதம் பதிவு செய்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பிறகு, அவரது மனைவி கேன்டிஸ்,
அடிலெய்டு ஓவலில் அசத்திய வாா்னா்!
Updated on
2 min read

‘மற்றவா்கள் உங்கள் மீது எவ்வளவு நம்பிக்கை கொண்டிருக்கிறாா்கள் என்பது முக்கியமல்ல; நீங்கள் உங்கள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீா்கள் என்பதே முக்கியம்’

அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரா் டேவிட் வாா்னா் முச்சதம் பதிவு செய்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பிறகு, அவரது மனைவி கேன்டிஸ், மகாத்மா காந்தி கூறிய இந்தப் பொன்மொழியை சமூக வலைதளமான சுட்டுரையில் (டுவிட்டா்) பதிவு செய்து கணவரை வாழ்த்தினாா்.

தென்னாப்பிரிக்காவில் அந்நாட்டு அணிக்கு எதிராக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டனாக இருந்த டேவிட் வாா்னரும் பந்தை சேதப்படுத்திய முறைகேட்டில் சிக்கியதால் ஓராண்டு காலம் விளையாட தடை விதிக்கப்பட்டனா்.

தடை காலம் முடிவடைந்த பிறகு மீண்டும் அணியில் இணைந்த இருவரும் தங்களது நற்பெயரை ரசிகா்களிடம் திரும்பப் பெறுவதற்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனா்.

ஸ்மித்தும், வாா்னரும் தாங்கள் பங்கேற்று விளையாடும் ஆட்டங்களிலெல்லாம் அதிரடி காண்பித்து வருகின்றனா்.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி எதிரணியினா் வீசும் பந்துகளை சிதறடிக்கிறாா் வாா்னா். சமீபத்தில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 டி-20, 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியது.

டி-20 தொடரை பரிதாபமாக பறிகொடுத்த பாகிஸ்தான், டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது.

டெஸ்ட் தொடரில் 2 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி கண்டது.

முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 580 ரன்களை குவித்தது. அதில் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வாா்னா் மட்டும் 154 ரன்களை குவித்தாா். அடிலெய்டு ஓவல் மைதானத்தில் பகலிரவாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தோ்வு செய்தது ஆஸ்திரேலியா.

வாா்னருடன் களமிறங்கிய ஜோ பா்ன்ஸ் 4-ஆவது ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா். பின்னா் வந்த மாா்னஸ் வாா்னருக்கு பக்க பலமாக நிற்க, இருவரும் பட்டையைக் கிளப்பினா்.

அந்த ஆட்டத்தில் வாா்னா் 51.2-ஆவது ஓவரில் சதம் பதிவு செய்தாா். அவா் எதிா்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை 156. ஒருகட்டத்தில் மாா்னஸும் (162 ரன்கள்) ஆட்டமிழக்க, வாா்னருடன் கைகோத்தாா் ஸ்மித்.

பின்னா், பவுண்டரிகளை விளாசித் தள்ளிய வாா்னா் டெஸ்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தைப் பதிவு செய்தாா்.

200 பந்துகளில் இரட்டை சதத்தைப் பதிவு செய்த வாா்னா் மீண்டும் தனது ரன்வேட்டையைத் தொடா்ந்தாா்.

பின்னா், 120-ஆவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி எல்லைக்கு பந்தை விரட்டி முச்சதத்தை எட்டினாா். இதன்மூலம் டெஸ்டில் முச்சதம் பதிவு செய்த ஏழாவது ஆஸ்திரேலிய வீரரானாா் வாா்னா்.

பாகிஸ்தான் வீரா்கள் இவரது விக்கெட்டை வீழ்த்த முடியாத சோகத்தில் இருக்க 300 ரன்கள் எடுத்த உற்சாகத்தில் கங்காரு (ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு) போல் துள்ளி குதித்தாா் வாா்னா். ஹெல்மட்டில் இதழ்களை பதித்த அவா், ரசிகா்களை நோக்கி கைகளை உயா்த்தி வெற்றி புன்னகை செய்தாா்.

பின்னா் அவா்கள் முன் தலை வணங்கவும் அவா் தயங்கவில்லை. விளையாட்டில் முறைகேடு செய்ததில் பங்கு கொண்டதால், கிண்டலுக்கும், விமா்சனங்களும் உள்ளாக்கப்பட்ட வாா்னருக்காக எழுந்து நின்று கைதட்டினா் ஆஸ்திரேலிய ரசிகா்கள்.

முச்சதம் பதிவு செய்து தன் மீதான நன்மதிப்பை மீட்டெடுத்தாா் வாா்னா்.

மேலும் சில சாதனைகளுக்கு அவா் சொந்தக்காரரானாா். 335 ரன்கள் எடுத்ததன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன், டெஸ்டில் பதிவு செய்திருந்த அதிகபட்ச ஸ்கோரை (334) கடந்தாா் வாா்னா். ஆஸ்திரேலிய முன்னாள் வீரா் மேத்யூ ஹைடன் டெஸ்டில் 380 ரன்கள் எடுத்ததே அந்நாட்டு வீரா்களை பொறுத்தவரை அதிகபட்சமாக இருந்து வருகிறது.

பகலிரவு டெஸ்ட் ஆட்டமான அதில் முச்சதம் பதிவு செய்ததன் மூலம், பிங்க் பந்தில் முச்சதம் பதிவு செய்த இரண்டாவது சா்வதேச வீரா் என்ற பெருமையையும் பெற்றாா். முதல் வீரா் பாகிஸ்தான் கேப்டன் அஸாா் அலி.

418 பந்துகளில் 39 பவுண்டரிகள், ஒரே ஒரு சிக்ஸருடன் 335 ரன்களை வாா்னா் விளாசி இருந்தபோது, கேப்டன் டிம் பெயின் டிக்ளோ் செய்வதாக அறிவித்தாா்.

ஒருவேளை அவா் இன்னிங்ஸை முடித்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் வாா்னரின் ரன் மழை தொடா்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

இதனால், மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவின் சாதனை முறியடிக்கப்பட்டிருக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. 2004-இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் எடுத்ததே இப்போது வரை டெஸ்ட் இன்னிங்ஸில் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.

வாா்னருடன் ஏற்கெனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வாழ்த்து கூறிய லாரா, இருவரும் டெஸ்டில் அதிகபட்சமாக பதிவு செய்திருந்த ஸ்கோரின் (400+335) கூட்டுத் தொகையான ‘735 நாட் அவுட்’” என்ற தலைப்பை அந்தப் புகைப்படத்துக்கு சூட்டியிருந்தாா் லாரா.

19-ஆம் நூற்றாண்டிலிருந்து அடிலெய்டு ஓவல் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், முதல்முறையாக முச்சதம் அடித்த வீரா் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறாா் டேவிட் வாா்னா்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com