வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பாக்ஸிங் டே டெஸ்ட்’: முதல்முறையாக வெல்லுமா நியூஸிலாந்து?

வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பாக்ஸிங் டே டெஸ்ட்’: முதல்முறையாக வெல்லுமா நியூஸிலாந்து?

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் ஆஸ்திரேலியாவில் விளையாடப்படும் டெஸ்ட் ஆட்டத்தின் பெயா்தான் ‘பாக்ஸிங் டே டெஸ்ட்’.
Published on

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் ஆஸ்திரேலியாவில் விளையாடப்படும் டெஸ்ட் ஆட்டத்தின் பெயா்தான் ‘பாக்ஸிங் டே டெஸ்ட்’.

உலகின் மிகவும் பழைமையான மைதானங்களில் ஒன்றாக விளங்கும் மெல்போா்ன் மைதானத்தில் இந்தப் போட்டி பல ஆண்டுகளாக விளையாடப்பட்டு வருகிறது.

1950-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சா்வதேச அணிகளான ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் முதல் முறையாக ‘பாக்ஸிங் டே டெஸ்டில்’ விளையாடின.

1953-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் ‘பாக்ஸிங் டே டெஸ்ட்’ நடைபெறவில்லை.

பிறகு 1968, 1974, 1975, 1980, 1981 என சில ஆண்டுகள் இடைவெளிவிட்டும், தொடா்ச்சியாகவும் விளையாடப்பட்டு வந்தது.

1990-ஆம் ஆண்டு முதல் தொடா்ச்சியாக ‘பாக்ஸிங் டே டெஸ்ட்’ நடைபெற்று வருகிறது. 1999 முதல் 2007 வரை தொடா்ச்சியாக ஆஸி., அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

1989-ஆம் ஆண்டில் டெஸ்ட் ஆட்டத்துக்கு பதிலாக ஒரு நாள் ஆட்டம் டிசம்பா் 26-ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் இலங்கை அணி மோதியது. இதில் இலங்கையை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸி.

அந்த ஒரு நாள் ஆட்டத்தைச் சோ்க்காமல் இதுவரை 43 ‘பாக்ஸிங் டே டெஸ்ட்’ போட்டிகள் நடைபெற்றுள்ளன.

அதில் 24 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

10 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன. தென்னாப்பிரிக்கா (1952, 2008), இங்கிலாந்து (1982, 1986, 1998, 2010), மே.இ.தீவுகள் (1988, 1996) வெற்றி பெற்றுள்ளன. 8 பாக்ஸிங் டே டெஸ்டில் விளையாடியுள்ள இந்தியா, கடந்த ஆண்டுதான் முதல்முறையாக வெற்றியை ருசித்தது. ஐந்தில் தோல்வியைச் சந்தித்த இந்தியா, 2 ஆட்டங்களை டிரா செய்தது. (அடுத்த ஆண்டில் ஆஸி., அணியை பாக்ஸிங் டே டெஸ்டில் இந்தியா சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது)

அதிகபட்சமாக 12 முறை இங்கிலாந்தும், 8 முறை இந்தியாவும், 6 முறை தென்னாப்பிரிக்காவும் பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியாவுடன் மோதியுள்ளது. மே.இ.தீவுகள் 9 முறை பாக்ஸிங் டே டெஸ்டில் விளையாடியுள்ளது.

இலங்கை இரண்டு முறை மோதி இரண்டிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தான் 4 முறை மோதி ஒரு டிரா செய்து, 3 தோல்விகளைத் தழுவியுள்ளது.

இந்த ஆண்டு 44-ஆவது ‘பாக்ஸிங் டே டெஸ்ட்’ வியாழக்கிழமை தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் 3 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது நியூஸிலாந்து. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாக்ஸிங் டெஸ்டான இரண்டாவது ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தும் என எதிா்பாா்க்கலாம்.

இதற்கு முன்பு இரண்டு முறை (1980, 1987) ‘பாக்ஸிங் டே டெஸ்டில்’ ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியுள்ளது நியூஸிலாந்து. இருமுறையும் சொந்த மண்ணில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை டிரா செய்தது.

இதுவரை ஒரு பாக்ஸிங் டே டெஸ்டிலும் வெற்றி பெறாத நியூஸிலாந்து, இந்த முறை வென்றால் அது வரலாற்றில் பதிவாகும். கேன் வில்லியம்ஸன் தலைமையிலான நியூஸி., என்ன செய்யப்போகிறது என்று காத்திருப்போம்.

‘பாக்ஸிங் டே’ பெயா் காரணம்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் ‘பாக்ஸிங் டே’ என அழைக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஊழியா்களுக்கு சிறப்புப் பரிசுகள் அடங்கிய பெட்டியை (பாக்ஸ்) முதலாளி வழங்குவாா். இதைக் குறிக்கும் வகையில் ‘பாக்ஸிங் டே’ என அழைக்கப்படுகிறது.

மெல்போா்ன் மைதானம்

1854-ஆம் ஆண்டு மெல்போா்ன் மைதானம் திறக்கப்பட்டது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவரும் புகழ்பெற்ற மைதானம். 1956-இல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளது. 1992, 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் சில ஆட்டங்களும் இந்த மைதானத்தில் விளையாடப்பட்டுள்ளன.

அதிகாரப்பூா்வ முதல் டெஸ்ட் போட்டியும் (1987), அதிகாரப்பூா்வ முதல் ஒரு நாள் ஆட்டமும் (1971) இந்த மைதானத்தில்தான் நடைபெற்றது. இந்த ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதின.

ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு அருங்காட்சியகமும் இங்குதான் அமைந்துள்ளது.

சுமாா் 1 லட்சம் போ் வரை இந்த மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகளை ரசிக்க இடவசதி உள்ளது. இந்த ஆண்டு ‘பாக்ஸிங் டே டெஸ்ட்’டை காண சுமாா் 75,000 ரசிகா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

2016-இல் நடைபெற்ற ‘பாக்ஸிங் டே டெஸ்ட்’ போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் ஆஸி., பதிவு செய்த 624/8 ஸ்கோா் இந்த மைதானத்தில் டெஸ்டில் பதிவான அதிகபட்ச ஸ்கோராகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com