புஜாரா டக் அவுட்: வெற்றியை நெருங்கும் விதர்பா அணி!

செளராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சிப் போட்டி இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது விதர்பா அணி... 
புஜாரா டக் அவுட்: வெற்றியை நெருங்கும் விதர்பா அணி!

செளராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சிப் போட்டி இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது விதர்பா அணி. 

இரு அணிகளுக்கு இடையிலான இறுதிச் சுற்று ஆட்டம் நாக்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில், செளராஷ்டிர அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விதர்பா ஆரம்பத்தில்  7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் விதர்பா அணியின் பேட்ஸ்மேன்கள் அக்ஷய் கர்னேவர் 73, அக்ஷய் வாக்ரே 34 ஆகியோர் நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் 120.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 312 ரன்களை எடுத்தது விதர்பா. செளராஷ்டிரா தரப்பில் உனாட்கட் 3, சகாரியா, மக்வானா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய செளராஷ்டிர அணி, முதல் இன்னிங்ஸில் 117 ஓவர்களில் 307 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 5 ரன்கள் முன்னிலை பெற்றது விதர்பா அணி. 

இதன்பிறகு 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த விதர்பா அணி, 92.5 ஓவர்களில் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சர்வேட் 49 ரன்கள் எடுத்து அணிக்கு உதவினார். செளராஷ்டிர அணியின் தர்மேந்திரசின் ஜடேஜா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு 206 ரன்கள் என்கிற இலக்குடன் ரஞ்சிக் கோப்பைக் கனவுடன் களமிறங்கிய செளராஷ்டிர அணி, விதர்பா அணியின் சிறப்பான பந்துவீச்சில் தடுமாறி வருகிறது. சர்வேட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி விதர்பா அணிக்கு உதவியுள்ளார். செளராஷ்டிர அணியின் தூணான புஜாராவை ரன் எதுவும் எடுக்கவிடாமல் வெளியேற்றினார். 4-ம் நாளின் முடிவில் செளராஷ்டிர அணி, 28 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. விஸ்வராஜ் ஜடேஜா 23 ரன்களிலும் கம்லேஷ் மக்வானா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள். 

ரஞ்சிக் கோப்பையை செளராஷ்டிர அணி வெல்ல, 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 148 ரன்கள் எடுக்கவேண்டியுள்ளது. இதனால் இந்த வருடமும் ரஞ்சிக் கோப்பையை விதர்பா அணி வெல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com