நியூஸிலாந்து அளித்த 372 ரன்கள் இலக்கு: ஓரளவு முயன்று தோற்ற இலங்கை அணி!

இந்தக் கடினமான இலக்கை நன்கு எதிர்கொண்டார்கள் இலங்கையின் முன்வரிசை பேட்ஸ்மேன்கள்...
நியூஸிலாந்து அளித்த 372 ரன்கள் இலக்கு: ஓரளவு முயன்று தோற்ற இலங்கை அணி!

நியூஸிலாந்து 371/7 (கப்தில் 138, வில்லியம்சன் 76, டெய்லர் 54, நீஷம் 47*) vs இலங்கை 326 (டிக்வெல்லா 76, குஷால் பெரேரா 102, நீஷம் 3-38). 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி.

நியூஸிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் நியூஸிலாந்தின் மெளண்ட் மெளன்கனியில் இன்று நடைபெற்றது. இதில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது நியூஸிலாந்து அணி.

முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் எடுத்தது. 

நியூஸி. தொடக்க வீரர் கப்தில் 139 பந்துகளில் 5 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 138 ரன்கள் குவித்தார். கேப்டன் வில்லியம்சன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஏழாவதாகக் களமிறங்கிய ஜிம்மி நீஷம் 13 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்ததுதான் இலங்கை அணியை மேலும் நோகடித்துள்ளது. 49-வது ஓவரை வீசிய திசாரா பெரேரா பந்துவீச்சு அவருக்கு லட்டு போல அமைந்தது. அந்த ஓவரில் 5 சிக்ஸர்களை அடித்து அசத்தினார். முதல் நான்கு பந்துகளில் நீஷம் சிக்ஸர் அடிக்க 5-வது பந்தை நோ பாலாக வீசினார் பெரேரா. இதனால் அடுத்தப் பந்தை சிக்ஸுக்கு அனுப்பினார். கடைசிப் பந்தில் நீஷமால் சிக்ஸ் அடிக்கமுடியாமல் போனது. 34 ரன்கள் கொண்ட ஓவராக அமைந்தது அது. இதனால் 350 ரன்கள் கிடைக்கும் என்கிற நிலையில் இருந்த நியூஸிலாந்து அணி கடைசியில் 371 ரன்கள் குவித்தது. கடைசியில் நீஷமின் இந்த அதிரடி ஆட்டம் நியூஸிலாந்து அணி வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்தக் கடினமான இலக்கை நன்கு எதிர்கொண்டார்கள் இலங்கையின் முன்வரிசை பேட்ஸ்மேன்கள். முதல் விக்கெட்டுக்கு 17.4 ஓவர்களில் 119 ரன்கள் கிடைத்தது. குணதிலகா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு 50 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்த டிக்வெல்லா நீஷம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3-ம் நிலை பேட்ஸ்மேனான குஷால் பெரேரா சிறப்பாக விளையாடினார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் தகுந்த இடைவெளியில் ஆட்டமிழந்தாலும் அவர் மட்டும் இன்னொரு முனையில் தாக்குப்பிடித்து விளையாடினார். சதமடித்த பெரேரா 102 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது இலங்கை அணி. நியூஸிலாந்தின் நீஷம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் முதல் ஒருநாள் ஆட்டத்தை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com