புதிய சாதனையை நிகழ்த்தி அரையிறுதிக்குத் தகுதியடைந்த செளராஷ்டிரா அணி!

372 ரன்களை வெற்றி இலக்காக செளராஷ்டிரா அணிக்கு வழங்கியபோது எதிர்பாராதவிதத்தில் ஒரு திருப்பம் ஏற்படும் என...
ஹர்விக் தேசாய்
ஹர்விக் தேசாய்

372 ரன்களை வெற்றி இலக்காக செளராஷ்டிரா அணிக்கு வழங்கியபோது எதிர்பாராதவிதத்தில் ஒரு திருப்பம் ஏற்படும் என உத்தரப் பிரதேச அணி வீரர்கள் எண்ணியிருக்க மாட்டார்கள். 

லக்னோ-வில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில், 103.3 ஓவர்களில் 385 ரன்கள் எடுத்தது. ஆர்கே சிங் 150 ரன்கள் எடுத்தார். உனாட்கட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். செளராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸில் 208 ரன்களே எடுத்தது. யாஷ் தயாள் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் முன்னிலை பெற்ற உத்தரப் பிரதேச அணி, அரையிறுதிக்குத் தகுதி பெறும் கனவுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த அணி 72.1 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தர்மேந்திரசின் ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் செளராஷ்டிரா அணிக்கு 372 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ரஞ்சிப் போட்டியில் எந்தவொரு அணியும் இந்த இலக்கை அடைந்ததில்லை. இதனால் மீண்டும் அரையிறுதிக்குத் தகுதி பெறும் கனவுடன் களமிறங்கினார்கள் உத்தரப் பிரதேச அணி பந்துவீச்சாளர்கள். ஆனால் அந்த அணியின் கனவைத் தகர்த்தார் 19 வயது ஹர்விக் தேசாய். தன்னுடைய முதல் சதத்தை எட்டிய அவர் 116 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். இன்று காலை 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களுடன் விளையாடத் தொடங்கியது செளராஷ்டிரா அணி. வெற்றிக்கு இன்னமும் 177 ரன்கள் தேவை என்கிற நிலையில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் மிகவும் பொறுப்புடன் பதற்றமின்றி விளையாடினார்கள். ஸ்னெல் படேல், புஜாரா, ஜாக்சன் ஆகியோர் அரை சதங்கள் எடுத்து செளராஷிரா அணி சாதனை வெற்றியை அடைய உதவினார்கள். அந்த அணி, 115.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 372 ரன்கள் எடுத்து அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது.

அரையிறுதிச் சுற்றில் கர்நாடகாவை எதிர்கொள்கிறது செளராஷ்டிரா அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com